செய்திகள்

பழனி கோவில் சிலை மோசடி முன்னாள் அறநிலையத்துறை ஆணையர் சிக்குகிறார்

Published On 2018-05-16 04:16 GMT   |   Update On 2018-05-16 04:16 GMT
பழனி கோவில் சிலை மோசடியில் முன்னாள் இந்து சமய அறநிலையத்துறை ஆணையரும் சம்மந்தப்பட்டிருப்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது. #Palanitemple

பழனி:

பழனி முருகன் கோவிலில் மூலவர் சன்னதியில் உள்ள நவபாஷாண சிலையை மறைத்து 200 கிலோ எடையில் ஐம்பொன்சிலை செய்யப்பட்டது. இந்த சிலை அமைத்ததில் மோசடி நடந்தது தெரியவரவே ஸ்தபதி முத்தையா, அப்போதைய இணை ஆணையர் ராஜா ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

சிலை கடத்தல் தடுப்பு பிரிவினர் நடத்திய விசாரணையில் முன்னாள் உதவி ஆணையர் புகழேந்தி, நகை மதிப்பீட்டாளர் தேவேந்திரன் ஆகியோரும் உடந்தையாக இருந்தது தெரியவரவே அவர்களும் கைது செய்யப்பட்டனர்.

சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐ.ஜி.பொன்மாணிக்கவேல் தலைமையிலான குழுவினர் கடந்த 4 நாட்களாக நடத்திய விசாரணையில் மேலும் சில முக்கிய ஆதாரங்களை திரட்டியுள்ளனர்.

மேலும் முன்னாள் ஊழியர்கள், கோவில் அர்ச்சகர்கள் ஆகியோரது வீடுகளுக்கே சென்று விசாரணை நடத்தியதுடன் அவர்கள் அளித்த தகவல்களையும் பதிவு செய்து கொண்டனர்.

இது குறித்து போலீஸ் அதிகாரிகள் தெரிவிக்கையில், பழனி கோவில் சிலை மோசடியில் முக்கிய திருப்பமாக கடந்த 2004ம் ஆண்டு இந்து சமய அறநிலையத்துறை ஆணையராக இருந்த தனபால் சம்மந்தப்பட்டிருப்ழுது தெரிய வந்துள்ளது.

புதிய சிலை தயாரிக்க முடிவெடுத்தது, அதற்கு தங்கம் உள்பட உலோகங்கள் எவ்வளவு சேர்க்க வேண்டும், எவ்வாறு சிலை அமைக்க வேண்டும் என்பது போன்ற ஆலோசனைகள் வழங்குவதற்கும் உத்தரவுகள் பிறப்பிக்கும் அதிகாரியாகவும் தனபால் இருந்துள்ளார்.

கடந்த 4 நாட்களாக பல்வேறு ஊழியர்கள் மற்றும் குருக்களிடம் நடத்திய விசாரணையில் முக்கிய ஆதாரங்கள் கிடைத்துள்ளது. அதன்படி தற்போது பட்டுக்கோட்டை அருகில் உள்ள முத்தாக்குறிச்சியில் வசிக்கும் தனபால் வீட்டிற்கு சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் சென்றுள்ளனர்.

ஆனால் அதிகாரிகள் வருவதை அறிந்ததும் தனபால் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். எனவே இவரையும் போலீசார் தங்கள் விசாரணை வளையத்திற்குள் கொண்டுவர உள்ளனர். அதன்பின்பு மேலும் சிலரை கைது செய்யவும் திட்டமிட்டுள்ளனர் என்று தெரிவித்தனர்.

பழனி கோவில் சிலை மோசடியில் அதிரடி திருப்பமாக முன்னாள் இந்துசமய அறநிலையத்துறை ஆணையரை அதிகாரிகள் நெருங்கி உள்ளதால் அடுத்து யார்? கைது செய்யப்படுவார்கள் என்ற பரபரப்பு எழுந்துள்ளது. #Palanitemple

Tags:    

Similar News