ஈரோடு நர்சிங் பயிற்சி நிறுவன முதல்வரை கண்டித்து மாணவிகள் திடீர் போராட்டம்
ஈரோடு:
ஈரோடு காந்தி ஜி ரோட்டில் உள்ள ஒரு அடுக்கு மாடியில் 2-வது மாடி கட்டிடத்தில் தனியார் நர்சிங் பயிற்சி நிறுவனம் உள்ளது. இங்கு ஈரோடு, சேலம், திருப்பூர் மாவட்டங்களை சேர்ந்த 30 மாணவிகள் படித்து வருகிறார்கள். முதலாம் ஆண்டில் 14 மாணவிகளும், 2-ம் ஆண்டில் 11 மாணவிகளும், 3-ம் ஆண்டில் 7 மாணவிகளும் படித்து வருகிறார்கள். பயிற்சி நிறுவனத்தின் மேலே உள்ள அறையில் இந்த மாணவிகள் தங்கி உள்ளனர்.
நிறுவனத்தில் 3-ம் ஆண்டு படிக்கும் 7 மாணவிகள் 6 மாதம் பயிற்சி எடுத்து கொண்டு 6 மாதம் பல்வேறு ஆஸ்பத்திரிகளில் வேலையும் பார்த்து வருகிறார்கள். இந்த வேலைக்கான ஊதியத்தை ஆஸ்பத்திரி நிர்வாகம் அந்த தனியார் பயிற்சி நிறுவனத்திடம் கொடுத்து விடுவார்கள்.
ஆனால் இந்த ஊதியத்தை எங்களுக்கு தர மறுக்கிறார்கள் என்று மாணவிகள் புகார் செய்துள்ளனர்.
மேலும் இறுதி தேர்வு எழுத உள்ள மாணவிகளுக்கு ஹால் டிக்கெட் கேட்டால் பதில் சொல்ல மறுக்கிறார்களாம்.
இதை கண்டித்து இன்று மாணவிகள் தங்கள் பெற்றோருடன் நர்சிங் நிறுவனத்துக்கு வந்து கடும் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். நர்சிங் மாணவிகளின் இந்த திடீர் வாக்குவாதம்- போராட்டத்தால் பரபரப்பு ஏற்பட்டது.
இது குறித்து 3-ம் ஆண்டு மாணவிகள் நிருபர்களிடம் கூறியதாவது:-
நாங்கள் வெளியே ஆஸ்பத்திரியில் பணி புரியும் ஊதியத்தை கேட்டால் தர மறுக்கிறார்கள். நிறைய விடுப்பு எடுத்துள்ளீர்கள். அதனால் சம்பளத்தை பிடித்தம் செய்து விட்டோம் என்கிறார்கள்.
மேலும் பயிற்சி நிறுவன (பெண்) முதல்வர் அவருக்கு தேவையான வேலைகளையும் செய்ய சொல்கிறார். கை-கால்களை அமுக்க சொல்கிறார். தலை சீவ சொல்கிறார். அவர் சொல்லும் வேலை செய்பவர்களுக்கு சலுகை கொடுக்கிறார். மறுப்பவர்களை பழி வாங்குகிறார். மேலும் பயிற்சிக்கான மார்க்கை குறைத்து விடுவதாக கூறுகிறார்.
இவ்வாறு மாணவிகள் கூறினர். #tamilnews