காரைக்குடி அருகே கழுத்தை அறுத்து இளம்பெண் கொலை
காரைக்குடி:
சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகே உள்ள திருச்சி-ராமேசுவரம் ரோட்டில் உள்ளது தேத்தாம்பட்டி. இந்த கிராமத்தைச் சேர்ந்தவர் அம்பலமூர்த்தி. இவரது மனைவி சாந்தி (வயது 32). இவர்களுக்கு 8 வயதில் சந்தோஷ் என்ற மகன் உள்ளான். இவன் அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 2-ம் வகுப்பு படித்து வருகிறான்.
அம்பலமூர்த்தி வெளி நாட்டில் வேலை பார்த்து வருவதால் சாந்தி தனது மகனுடன் தனியாக வசித்து வந்தார். நேற்று இரவு வழக்கம்போல் வீட்டில் தனி அறையில் மகனுடன் சாந்தி தூங்கினார்.
நள்ளிரவு நேரத்தில் அங்கு வந்த மர்ம நபர்கள் சுவர் ஏறி குதித்து வீட்டுக்குள் புகுந்தனர். தாய்-மகன் தூங்கிக்கொண்டிருந்த அறைக்கு சென்ற அவர்கள் மயக்க மருந்து ஸ்பிரே அடித்தனர். இதில் அவர்கள் மயக்கம் அடைந்தனர்.
இதைத் தொடந்து அந்த கும்பல் சாந்தியின் கழுத்தை கத்தியால் அறுத்தது. இதில் ரத்த வெள்ளத்தில் சாந்தி இறந்தார். பின்னர் அந்த கும்பல் சாந்தியின் கழுத்தில் கிடந்த 8 பவுன் நகையை மட்டும் திருடினர். அருகில் மயக்க நிலையில் தூங்கிக்கொண்டிருந்த சந்தோஷை எதுவும் செய்யாமல் அங்கிருந்து தப்பியது.
இன்று காலை மயக்கம் தெளிந்து எழுந்த சந்தோஷ் அருகில் தனது தாய் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடப்பதை கண்டு கதறினான். சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் வீட்டுக்குள் சென்று பார்த்தபோதுதான் சாந்தி கொடூரமாக கொலை செய்யப்பட்டு இருந்தது தெரிய வந்தது.
இதுகுறித்து தகவல் அறிந்த செட்டிநாடு போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து சாந்தியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
நகையை திருடும் நோக்கத்தில்தான் மர்ம நபர்கள் சாந்தியை கொலை செய்தார்களா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.