செய்திகள்

காவிரி விவகாரம் - தமிழக வாழ்வுரிமை கட்சியினர் செல்போன் டவர்களில் ஏறி தற்கொலை மிரட்டல்

Published On 2018-03-30 10:36 IST   |   Update On 2018-03-30 10:36:00 IST
சிவகங்கையில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி தமிழக வாழ்வுரிமை கட்சியினர் செல்போன் டவர்களில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்ததால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
சிவகங்கை:

தமிழகத்துக்கும், கர்நாடகத்திற்கும் இடையே நீண்ட காலமாக காவிரி நதி நீரை பங்கிடுவதில் பிரச்சினை நிலவி வருகிறது.

இது தொடர்பான வழக்கை விசாரித்த உச்சநீதி மன்றம் நீரை பங்கிடுவது தொடர்பாக வாரியம் அமைக்க உத்தரவிட்டது.

ஆனால் மத்திய அரசு அதற்கான எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. நேற்றுடன் வாரியம் அமைப்பதற்கான காலக்கெடு முடிவடைந்ததால் தமிழகம் முழுவதும் மத்திய அரசை கண்டித்து விவசாயிகள், அரசியல் கட்சியினர், பல்வேறு அமைப்பினர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றன.

சிவகங்கை நகரில் இன்று காலை பாலா என்பவரின் தலைமையில் வாழ்வுரிமை கட்சியைச் சேர்ந்த 8 பேர் நகரின் தெப்பக்குளம் அருகில் உள்ள செல்போன் டவரில் ஏறி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என வலியுறுத்தி தற்கொலை மிரட்டல் விடுத்தனர்.

இதே கட்சியைச் சேர்ந்த மற்ற 8 பேர் பஸ் நிலையம் அருகில் உள்ள செல்போன் டவரில் ஏறி மிரட்டல் விடுத்தனர்.

இது குறித்து தகவல் அறிந்த சிவகங்கை நகர் போலீசார் அங்கு சென்று போராட்டக்காரர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். நீண்ட இழுபறிக்கு பின்னர் அவர்களை போலீசார் சமாதானப்படுத்தி கீழே இறக்கினர்.

இதைத் தொடர்ந்து வாழ்வுரிமை கட்சியைச் சேர்ந்த 16 பேரையும் போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்று போலீசார் விசாரித்து வருகின்றனர்.

வாழ்வுரிமை கட்சியினரின் திடீர் தற்கொலை மிரட்டலால் அந்தப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. முன்னதாக நேற்று இரவும் இதே 16 பேர் செல்போன் டவரில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்தது குறிப்பிடத்தக்கது. #tamilnews

Similar News