செய்திகள்

விருதுநகர் அருகே பட்டாசு குடோனில் வெடிவிபத்து - 2 பேர் உயிரிழப்பு

Published On 2018-03-30 10:01 IST   |   Update On 2018-03-30 11:30:00 IST
விருதுநகர் அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட பயங்கர வெடி விபத்தில் 2 தொழிலாளர்கள் உடல் சிதறி பலியானார்கள். மற்றொருவர் 80 சதவீத தீக்காயத்துடன் ஆபத்தான நிலையில் உள்ளார்.
விருதுநகர்:

விருதுநகர் அருகே உள்ள ஓ.கோவில்பட்டியில் முருகேசன் என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலை உள்ளது. இங்கு சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த பெண்கள் உள்பட 30-க்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருகின்றனர்.

இன்று காலை 8 மணிக்கு பட்டாசு ஆலையில் உள்ள ஒரு அறையில் முத்துலா புரத்தைச் சேர்ந்த முருகன் (வயது40), பள்ளப்பட்டியை சேர்ந்த சந்திரன் (30), குமாரலிங்கபுரத்தைச் சேர்ந்த இருளப்பன் (38) ஆகியோர் மருந்து கலக்கும் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.

அப்போது உராய்வு ஏற்பட்டதில் மருந்துகள் வெடிக்க தொடங்கின. சிறிது நேரத்தில் அறை முழுவதும் இருந்த மருந்துகளில் தீ பரவி பயங்கர சத்தத்துடன் வெடித்தன.

இதனால் அந்த அறையில் இருந்த 3 தொழிலாளர்கள் வெளியேற முடியாமல் சிக்கினர். வெடி விபத்தில் முருகன், சந்திரன் ஆகியோர் உடல் சிதறி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர்.

விபத்து குறித்து தகவல் அறிந்த தீயணைப்பு வீரர்கள் மற்றும் போலீசார் சம்பவ இடம் விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். வீரர்கள் அறைக்குள் தீக்காயத்துடன் உயிருக்கு போராடிக்கொண்டிருந்த இருளப்பனை மீட்டு சிவகாசியில் உள்ள தீக்காய சிறப்பு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். 80 சதவீத தீக்காயத்துடன் ஆபத்தான நிலையில் அவர் சிகிச்சை பெற்று வருகிறார்.

பட்டாசு ஆலையில் தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில ஈடுபட்டுள்ளனர்.

காலையில் இவர்கள் மட்டுமே முதலில் வேலைக்கு வந்ததால் பெரும் உயிர்ச் சேதம் தவிர்க்கப்பட்டது. #tamilnews

Similar News