செய்திகள்

ஜெயங்கொண்டம் அருகே அதிகாரி மனைவியை கொன்று நகை-பணம் துணிகர கொள்ளை

Published On 2018-03-29 09:42 IST   |   Update On 2018-03-29 09:42:00 IST
ஜெயங்கொண்டம் அருகே வீட்டில் தனியாக இருந்த அதிகாரி மனைவியை கொன்று நகை மற்றும் பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர்.

ஜெயங்கொண்டம்:

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் வேலாயுதம் நகர் 5-வது குறுக்குதெருவில் வசித்து வருபவர் குணசேகரன் (வயது 50). இவர் கடலூர் மாவட்டம் திட்டக்குடி பேரூராட்சி செயல் அலுவலராக பணியாற்றி வருகிறார்.

இவரது மனைவி பாரதி (45). இந்த தம்பதிக்கு ஆதித்யன் (12) என்ற மகனும், ஆர்த்தி (14) என்ற மகளும் உள்ளனர். குழந்தைகள் இருவரும் அதே ஊரில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் படித்து வருகின்றனர்.

நேற்று காலை இருவரும் வழக்கம்போல் பள்ளிக்கு சென்றுவிட்டனர். குணசேகரன் திட்டக்குடிக்கு சென்று விட்டார். தினமும் பள்ளி முடிந்தவுடன் பாரதி பள்ளிக்கு சென்று தங்கள் குழந்தைகளை அழைத்து வருவார்.

ஆனால் நேற்று தாய் வராததால் குழந்தைகள் இருவரும் தாங்களாகவே வீட்டிற்கு நடந்து வந்தனர். வீட்டிற்கு வந்து கதவை தட்டிய போது கதவு திறக்கவில்லை. பின்பக்கமாக சென்று சமையலறை ஜன்னல் வழியே பார்த்தபோது தாய் ரத்த வெள்ளத்தில் கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்து குழந்தைகள் அலறினர்.

இந்த சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் வசிப்பவர்கள் கதவின் பூட்டை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது பாரதி ரத்த வெள்ளத்தில் கிடந்தார். உடனடியாக மருத்துவமனைக்கு தூக்கி சென்றனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர் பாரதி ஏற்கனவே இறந்து விட்டதாக கூறியுள்ளனர்.

பாரதியின் கழுத்தில் கத்தி குத்தும், பின்புறம் தலையில் பலத்த காயமும் இருந்தது. பாரதியின் கழுத்தில் இருந்த 10 பவுன் தாலி செயின் மற்றும் 5 பவுன் செயின் ஒன்றையும் அறுத்து சென்றுள்ளனர். மேலும் வீட்டில் இருந்த அனைத்து பீரோக்கள் உடைந்த நிலையிலும் இருந்தன. பீரோ மற்றும் லாக்கரில் இருந்த பவுன் மற்றும் பணம் கொள்ளையடிக்கப்பட்டதும் தெரியவந்துள்ளது.

மோப்ப நாய் டிக்சி வரவழைக்கப்பட்டது. அந்த நாய் கொலை நடந்த வீட்டிலிருந்து அருகில் 2 கி.மீ. தூரத்தில் உள்ள பாப் பாங்குளம் கிராமம் தெற்கு தெரு வரை சென்று அங்கேயே சிறிது நேரம் சுற்றி வந்தது. அதன்பின்னர் பெரம்பலூரிலிருந்து கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு பதிவு செய்யப்பட்டன.

அரியலூர் மாவட்ட எஸ்.பி. அபிநவ்குமார் சம்பவ இடம் வந்து விசாரணை செய்தார். இது குறித்து ஜெயங்கொண்டம் டி.எஸ்.பி. கென்னடி, இன்ஸ்பெக்டர் வேலுச்சாமி ஆகியோர் வழக்கு பதிவு செய்து பெண்ணை கொலை செய்து கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

பாரதி அணிந்திருந்த தாலிச்செயினில் தாலியை மட்டும் துண்டாக்கி அதனை விட்டு விட்டு, செயின்களை மட்டும் கொள்ளையர்கள் கொள்ளையடித்து சென்றுள்ளனர். மேலும் பாரதி பயன்படுத்திவந்த 2 செல்போன்களையும் எடுத்துச் சென்றுள்ளனர்.

Similar News