செய்திகள்

அரியலூரில் ஒருங்கிணைந்த நீதிமன்றம் அமைக்கப்படுமா? வக்கீல்கள் - பொதுமக்கள் எதிர்பார்ப்பு

Published On 2018-03-21 12:04 IST   |   Update On 2018-03-21 12:04:00 IST
அனைத்து தரப்பு பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று அரியலூரில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் அமைத்து கொடுக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
அரியலூர்:

ஆங்கிலேயர் ஆட்சி காலத்திலேயே சுமார் 150 ஆண்டுகளுக்கு முன்பே திருச்சிக்கு அடுத்தபடியாக அரியலூரில் தான் கோர்ட் அமைக்கப்பட்டது.

தற்போது மாவட்ட நீதிமன்றம், கூடுதல் மாவட்ட நீதிமன்றம், மகிளா கோர்ட், சப்கோர்ட், குடும்பநல கோர்ட், தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றம், முதன்மை மாவட்ட உரிமையியல் நீதிமன்றம், கூடுதல் மாவட்ட உரிமையியல் நீதிமன்றம், நீதிதுறை நடுவர் நீதிமன்றம் எண்-1, எண்-2, நுகர்வோர் கோர்ட் உட்பட 11 கோர்ட்டுகள் உள்ளது.

இதில் மகிளா கோர்ட், குடும்ப நலநீதிமன்றம், நுகர்வோர் கோர்ட் வாடகை கட்டிடத்தில் இயங்கி வருகின்றது. இதில் 2 நீதிபதிகளுக்குதான் நீதிபதி குடியிருப்பு உள்ளது. மற்ற நீதிபதிகள் வாடகை வீட்டில் வசித்து வருகின்றனர். இதனால் தமிழக அரசிற்கு மாதம் பல லட்சம் ரூபாய் செலவாகிறது.

பழமையான கட்டிடம் எந்த நேரத்திலும் இடிந்து விழும் அபாய நிலையில் உள்ளது. சுற்றிலும் முட்புதர்கள் மண்டிகிடப்பதால் பாம்பு, பல்லி, பூச்சிகள் படையெடுத்து வருகின்றது. பாதுகாக்கப்படவேண்டிய முக்கிய ஆவணங்கள் மழை காலங்களில் நனைகின்றது.

கோர்ட்டில் சுமார் 200 வழக்கறிஞர்கள் பணிபுரிந்து வருகின்றனர். 17ஆண்டு காலமாக வக்கீல்கள், அனைத்து தரப்பு பொதுமக்கள், அரசியல்வாதிகள் ஒன்று திரண்டு நடத்திய போராட்டம் காரணமாக அரியலூர் மாவட்டத்தின் தலைநகரமாக உருவாக்கப்பட்டது. அனைத்து தரப்பு அரசு அலுவலகங்களும் அமைக்கப்பட்டுள்ளது.

மாவட்ட தலைநகரில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் அமைத்து கொடுப்பது அரசின் கடமை. ஆனால் தேர்தல் காலங்களில் மட்டும் அரசியல்வாதிகள் கொடுக்கும் முதல் தேர்தல் வாக்குறுதி அரியலூரில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் அமைத்து கொடுக்கப்படும் என்று. வெற்றி பெற்ற பிறகு எட்டிகூட பார்ப்பதில்லை என்று புகார் கூறுகின்றனர் பொதுமக்கள். வக்கீல் சங்கத்தினரும் தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார்கள்.

மறைந்த முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்து மனு கொடுத்துள்ளனர். உடனடியாக செய்து கொடுப்பதாக உறுதியளித்தார். அதுவும் கிடப்பில் போடப்பட்டுள்ளது. 23.8.2017 அன்று அரியலூரில் நடைபெற்ற எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவில் கலந்து கொள்ள வந்த முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியை நேரில் சந்தித்து வக்கீல் சங்கத்தினர் மனு கொடுத்தனர்.

தலைமை செயலகத்திலிருந்து மனு மீது பரிசீலிக்கப்பட்டு உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என பதில் வந்ததே தவிர எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. மாவட்ட நிர்வாகம் சார்பில் அரியலூர் - திருச்சி பைபாஸ் சாலையில் அம்மாகுளம் கிராம பகுதியில் அமீனாபாத் எல்லையில் நிலம் பார்வையிடப்பட்டு சர்வே செய்து ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் அமைக்க போதுமான இடம் என அரசு அறிக்கை அனுப்பியும் பல ஆண்டுகளாக கிடப்பில் கிடக்கிறது.

இந்நிலையில் அரியலூரில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் அமைத்துக் கொடுக்க கோரி அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் போராட்டம் நடத்தப்படும் என வக்கீல் சங்கத்தினர் அறிவித்துள்ளனர்.

எனவே அனைத்து தரப்பு பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று அரியலூரில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் அமைத்து கொடுக்கப்படுமா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. #tamilnews

Similar News