செய்திகள்

நாகை அருகே கார் மீது மினிலாரி மோதி விபத்து- 3 பேர் பலி

Published On 2018-03-17 10:44 IST   |   Update On 2018-03-17 10:44:00 IST
நாகை அருகே இன்று அதிகாலை கார் மீது மினிலாரி மோதிய விபத்தில் 3 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியானார்கள். மேலும் படுகாயமடைந்தவர்கள் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
கீழ்வேளூர்:

கோவை மாவட்டம் பொள்ளாச்சியை சேர்ந்தவர் பகவதீஸ்வரன் (வயது 59) தேங்காய் வியாபாரி.

இவர் கடந்த சில ஆண்டுகளாக கேரள மாநிலம் பாலக்காடு சித்தூர் பகுதியில் குடும்பத்தினருடன் வசித்து வருகிறார்.

பகவதீஸ்வரன் புதியதாக கார் வாங்கினார். இதனால் குடும்பத்தினருடன் கோவில்களுக்கு சென்று தரிசனம் செய்ய முடிவு செய்தார்.

அதன்படி அவர் தனது மனைவி ஜெயவேணி (49), மகன் திலீப்(30), மற்றும் உறவினர்கள் ஆறுச்சாமி (55), தாரணி (24) ஆகியோருடன் கேரளாவில் இருந்து சீர்காழி அருகே உள்ள வைத்தீஸ்வரன் கோவிலுக்கு நேற்று புது காரில் வந்தார். பின்னர் நாகை வேளாங்கண்ணிக்கு சென்று அங்கு தங்கினார்.

இன்று அதிகாலை திருநள்ளாறுக்கு செல்வதற்காக அவர்கள் காரில் புறப்பட்டனர்.

அதிகாலை 4 மணியளவில் கார் நாகை அடுத்த பரவை என்ற இடத்தில் சென்று கொண்டிருந்தது. அப்போது கார் திடீரென கட்டுப்பாட்டை இழந்து ரோட்டில் சென்றது.

அந்த சமயத்தில் தேங்காய் பாரம் ஏற்றிய ஒரு மினிலாரி, நாகையை நோக்கி வந்து கொண்டிருந்தது. அப்போது திடீரென கார், தேங்காய் பாரம் ஏற்றிய லாரி மீது மோதியது. மேலும் எதிரே வந்த மற்றொரு மினிலாரி மீதும் கார் மோதியது. இதில் கார் ரோட்டில் தலைக்குப்புற கவிழ்ந்தது.

இதில் காரில் இருந்த ஜெயவேணி, மகன் திலீப், மற்றும் ஆறுச்சாமி ஆகியோர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக இறந்தனர்.

மேலும் காரில் இருந்த பகவதீஸ்வரன், தாரணி மற்றும் தேங்காய் பாரம் ஏற்றிய மினிலாரி டிரைவர் கோவிந்தசாமி (52), லாரி உரிமையாளர் தெய்வேந்திரன் (40), மற்றொரு மினி லாரி டிரைவர் ராமச்சந்திரன் ஆகிய 5 பேர் படுகாயம் அடைந்தனர்.

இந்த விபத்து பற்றி தகவல் கிடைத்ததும் வேளாங்கண்ணி போலீசார் விரைந்து சென்று பலியான 3 பேரின் உடல்களையும் மீட்டு நாகை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் காயம் அடைந்த 5 பேரையும் 108 ஆம்புலன்ஸ் மூலம் நாகை ஆஸ்பத்திரிக்கு அனுப்பினர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த விபத்து பற்றி வேளாங்கண்ணி போலீசார் விசாரித்து வருகிறார்கள். #Tamilnews

Similar News