பறிமுதல் செய்யப்பட்ட கள்ளத்துப்பாக்கி பற்றி சி.பி.ஐ. விசாரிக்க வேண்டும்: ராமதாஸ் அறிக்கை
சென்னை:
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
சென்னை மற்றும் திருச்சியில் விற்பனைக்காக கடத்தி வரப்பட்ட 7 கள்ளத் துப்பாக்கிகள் மற்றும் கள்ள ரூபாய் தாள்களை காவல்துறை பறிமுதல் செய்துள்ளது. தமிழகத்தில் அதிக அளவில் கள்ளத் துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டிருப்பதும், இதில் காவலரே சம்பந்தப் பட்டிருப்பதும் அதிர்ச்சி அளிக்கிறது.
அசாம் தலைநகர் கவுகாத்தியிலிருந்து சென்னை வழியாக திருவனந்தபுரம் செல்லும் தொடர்வண்டியில் திருவொற்றியூர் வந்த இருவரிடமிருந்து 5 கள்ளத்துப்பாக்கிகளும், ரூ.14 லட்சம் கள்ளரூபாய் தாள்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
அதே போல், திருச்சியில் ஒரு விடுதியில் பதுங்கியிருந்த இருவரிடமிருந்து 2 கள்ளத் துப்பாக்கிகளும், 10 துப்பாக்கி குண்டுகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இது தொடர்பாக கைது செய் யப்பட்ட இருவரில் ஒருவர் சென்னையைச் சேர்ந்த காவலர் என்றும் தெரிய வந்திருக்கிறது.
தலைநகர் சென்னை உட்பட தமிழகம் முழுவதும் கள்ளத்துப்பாக்கிகள் தாராளமாக விற்கப்படுகின்றன என்பதையே இந்த நிகழ்வுகள் காட்டுகின்றன. சென்னை மற்றும் திருச்சியில் கள்ளத் துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டது எதேச்சையான நிகழ்வுகள் அல்ல.
காவல்துறை அதிகாரிகளுக்கு நன்றாகத் தெரிந்து தான் கள்ளத்துப்பாக்கிகள் விற்பனை செய்யப்படுகின்றன. தமிழகத்தை ஆளும் கட்சி, இதற்கு முன் ஆண்ட கட்சிகளைச் சேர்ந்த சிலரும் இந்த கும்பல்களிடமிருந்து கள்ளத் துப்பாக்கிகளை வாங்கியிருப்பதாகவும், அவர்களின் ஆதரவு இந்த கடத்தல் கும்பலுக்கு இருப்பதாகவும் கூறப்படுகிறது.
இச்செய்தி உண்மையாக இருந்தால் தமிழகம் மிகப் பெரிய ஆபத்தை நோக்கிச் சென்று கொண்டிருப்பதாக கருத வேண்டும். துப்பாக்கி கலாச்சாரத்திறகு உடனடியாக முடிவு கட்டாவிட்டால், சிறிய குற்றங்களுக்கு கூட கள்ளத்துப்பாக்கியை பயன்படுத்தும் நிலை உருவாகி விடும்.
அப்படி ஒரு நிலை தமிழகத்தில் ஏற்படாமல் தடுக்க வேண்டும். இதற்காக துப்பாக்கிக் கடத்தல் கும்பல்கள் அனைத்தும் சட்டத்தின் துணை கொண்டு வீழ்த்தப்பட வேண்டும். துப்பாக்கிக் கடத்தலுக்கு அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகள் ஆதரவளித்ததாகக் கூறப்படுவதாலும், இது பல மாநிலங்கள் சம்பந்தப்பட்ட விவகாரம் என்பதாலும் இது குறித்து சி.பி.ஐ விசாரணைக்கு அரசு ஆணையிட வேண்டும்.
இவ்வாறு டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.