செய்திகள்

காஞ்சி சங்கரமடம் முன்பு வி.சிறுத்தை - பெரியார் திராவிடர் கழகம் போராட்டம்

Published On 2018-01-25 13:49 IST   |   Update On 2018-01-25 13:49:00 IST
காஞ்சீபுரம் சாலைத் தெருவில் உள்ள காஞ்சி சங்கரமடத்தை விடுதலை சிறுத்தைகள், பெரியார் திராவிடர் கழகம் உள்பட சுமார் 100-க்கும் மேற்பட்டோர் முற்றுகையிட்டனர்.

காஞ்சீபுரம்:

சென்னையில் நடந்த புத்தக வெளியீட்டு விழாவில் காஞ்சி சங்கராச்சாரியார் விஜயேந்திரர் கலந்து கொண்டார்.

விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடும்போது விஜயேந்திரர் எழுந்து நிற்கவில்லை என்றும் தேசிய கீதத்தின் போது மட்டும் எழுந்து நின்றார் என்றும் சர்ச்சை எழுந்தது. இது தமிழை அவமதிப்பதான செயல் என்று பல்வேறு அமைப்பினர், அரசியல் கட்சியினர் கண்டனம் தெரிவித்து உள்ளனர்.

இது தொடர்பாக சங்கரமடம் அளித்துள்ள விளக்கத்தில் ‘வழக்கமாக விழாக்களின் தொடக்கத்தில் கடவுள் வாழ்த்து பாடும் போது காஞ்சி சங்கராச்சாரியார்கள் ஜெயேந்திரர், விஜயேந்திரர் ஆகியோர் தியானத்தில் இருப்பது வழக்கம்.

இதேபோலத்தான் இந்த விழாவிலும் விஜயேந்திரர் தமிழ்த்தாய் வாழ்த்து பாடும் போது தியானத்தில் இருந்தார். தமிழை அவமதிக்கவில்லை’ என்று தெரிவித்து இருந்தது.

ஆனால் விஜயேந்திரர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கூறி பல்வேறு அமைப்பினர் தமிழகம் முழுவதும் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த நிலையில் இன்று மதியம் காஞ்சீபுரம் சாலைத் தெருவில் உள்ள காஞ்சி சங்கரமடத்தை விடுதலை சிறுத்தைகள், பெரியார் திராவிடர் கழகம், மக்கள் மன்றம் அமைப்பை சேர்ந்த பெண்கள் உள்பட சுமார் 100-க்கும் மேற்பட்டோர் முற்றுகையிட்டனர்.

அவர்கள் விஜயேந்திரருக்கு எதிராக கோ‌ஷங்கள் எழுப்பியபடி மடத்துக்கு செல்ல முயன்றனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

போராட்டத்தில் ஈடுபட்டவர்களை டி.எஸ்.பி. முகிலன் தலைமையிலான போலீசார் தடுத்து நிறுத்தினர். இதனால் போலீசாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு தள்ளுமுள்ளு உருவானது.

இதையடுத்து போராட்டக்காரர்கள் 100 பேரை போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து சங்கரமடம் முன்பு குவிக்கப்பட்டு உள்ளனர். அவர்கள் சங்கர மடத்துக்கு வரும் பக்தர்களையும் கண்காணித்து வருகிறார்கள்.

இன்று காலை வழக்கம் போல் பக்தர்கள் மடத்துக்குள் சென்று வந்தனர். மடத்தில் ஜெயேந்திரர், விஜயேந்திரர் ஆகியோர் வழக்கமான வழிபாடு மற்றும் பக்தர்களுக்கு ஆசி வழங்கினர்.

சங்கர மடத்தின் முன்பு போலீசார் குவிக்கப்பட்டு உள்ளதால் காஞ்சீபுரம் நகரம் பரபரப்பாக காணப்படுகிறது.

ராமேசுவரம் அக்னி தீர்த்த கடல் அருகே காஞ்சி சங்கர மடத்துக்கு சொந்தமான மடம் உள்ளது. இங்கு இன்று காலை தமிழர் தேசிய முன்னணியை சேர்ந்த இளங்கோ தலைமையில் 11 பேர் விஜயேந்திரரை கண்டித்து கோ‌ஷமிட்டவாறு உள்ளே நுழைந்தனர். அவர்கள் மடத்திற்குள் அமர்ந்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

தமிழ்தாய் வாழ்த்தை அவமதித்த விஜயேந்திரரை கைது செய்ய வேண்டும். அவர் நிபந்தனையின்றி மன்னிப்பு கேட்க வேண்டும் என ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் வலியுறுத்தினர்.

உடனே அங்கு வந்த மடத்தின் மேலாளர் சுந்தர வாத்தியார், பா.ஜனதா கட்சியின் மாவட்ட செயலாளர் முரளிதரன் ஆகியோர் அவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த ராமேசுவரம் கோவில் போலீசார் சம்பவ இடம் வந்து பேச்சுவார்த்தை நடத்தி ஆர்ப்பாட்டம் நடத்தியவர்களை அங்கிருந்து வெளியேற்றினர்.

தஞ்சை புதிய பஸ் நிலையத்தில் உள்ள பெரியார் சிலைக்கு முன்பு இன்று காலை தமிழ் மாணவர் அமைப்பை சேர்ந்த 20-க்கும் மேற்பட்டோர் வந்தனர். அவர்கள் விஜயேந்திர சுவாமிகளின் உருவ படத்தை எரித்தனர்.

தமிழ்த்தாய் வாழ்த்தை விஜயேந்திரர் அவமதிப்பதை கண்டித்து கோ‌ஷங்கள் எழுப்பினர். #tamilnews


Similar News