செய்திகள்
ஜெயங்கொண்டத்தில் நடைபெற்ற தி.க. சமூகநீதி மாநாட்டில் கி.வீரமணிக்கு எடைக்கு எடை நாணயம் வழங்கியபோது எடுத்தபடம்.

அரசியல் கட்சிகளை விட நோட்டாவுக்கும், பாரதிய ஜனதாவுக்கும்தான் போட்டி: கி.வீரமணி

Published On 2018-01-22 05:19 GMT   |   Update On 2018-01-22 05:19 GMT
நோட்டாவுக்கும் பா.ஜ.வுக்கும் தான் போட்டியே தவிர இவர்களுக்கும் மற்ற கட்சிக்கும் கிடையாது என திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி கூறினார்.
ஜெயங்கொண்டம்:

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் நடைபெற்ற திராவிடர் கழக சமூகநீதி மாநாட்டில் கலந்து கொள்ள வந்த திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி நிருபர்களிடம் கூறியதாவது:-

ஜெயங்கொண்டத்தில் திராவிடர் கழகம் சார்பில் நடைபெற இருந்த பேரணிக்கு காவல்துறையினர் அனுமதி மறுத்தது குறித்து கேட்ட போது ஆர்.எஸ்.எஸ்.சின் ஊர்வலத்திற்கு அனுமதி அளித்துள்ளதாக கூறினர். அமைதி பூங்காவாக தமிழகத்தை பார்த்துக்கொள்ளும் திரவிடக்கழகத்திற்கு அனுமதி மறுத்தது ஒருதலைபட்சமானது.

இதற்கான விலையை இந்த அரசு தேர்தல் சமயத்தில் மட்டுமல்ல, அதற்கு முன்பே கொடுக்கவேண்டியது இருக்கும். ஆண்டாள் குறித்த சர்ச்சை விவகாரத்தில் வைரமுத்து கருத்துக்காக எதிர்க்கவில்லை. அதற்கு மாறாக அவருடைய பேச்சை திரித்து மாற்றிக் கூறி அதன் மூலமாக பெரியார் மண்ணில் ஆர். எஸ்.எஸ்.ஐ. அல்லது மத வெறியை தூண்டி தாங்கள் கால் ஊன்றுவதற்கு வாய்ப்பு ஏற்படுமா இதனால் அரசியல் லாபத்தை ஏற்படுத்திக் கொள்ளலாமா? என்று நினைக்கிறார்கள்.

ஆன்மிக அரசியல் அடித்தளத்தை இதன் மூலமாக நிறைவேற்றலாமா? என்றும் நினைக்கிறார்கள். ஆனால் அது நடக்காது. என்ன முயற்சி எடுத்தாலும் நோட்டாவை விட இவர்கள் எவ்வளவு நோட்டு கொடுத்தாலும் அதிகமான இடத்தில் வெற்றி பெறமுடியாது என்பது தெரிந்துவிட்டது. நோட்டாவுக்கும் பா.ஜ.வுக்கும் தான் போட்டியே தவிர இவர்களுக்கும் மற்ற கட்சிக்கும் கிடையாது.

இவ்வாறு அவர் கூறினார்.

டாக்டர் ராமதாசை ஜீயர்கள் சென்று சந்தித்தது குறித்து கேட்டபோது, பெரியார் பாதைக்கு அவர் விரைவாக வந்து கொண்டு இருக்கிறார் என்பதற்கு அடையாளமாக இருக்கும் என தெரிவித்தார்.

ஆண்டாள் விவகாரத்தில் ரஜினி மற்றும் கமல் மவுனம் குறித்து கேட்ட போது, இது போன்ற கருத்து சொல்லக் கூடிய அளவிற்கு ஆழமான சிந்தனையும், துணிவும் அவர்களுக்கு இல்லை என்பது தான் தெளிவாக காட்டுகிறது. பாலுக்கும் காவல், பூனைக்கும் தோழன் என்பது தான் அவர்களுடைய நிலைப்பாடு.

கூட்டத்தின் முடிவில் கி.வீரமணியின் எடைக்கு எடை நாணயங்கள், காய்கறி மூட்டை, தென்னை மரக்கன்றுகள் வழங்கினர். #Tamilnews
Tags:    

Similar News