செய்திகள்

புதுக்கோட்டை அருகே தற்காலிக டிரைவர் இயக்கிய அரசு பஸ்-தனியார் பஸ் மோதல்

Published On 2018-01-11 14:42 GMT   |   Update On 2018-01-11 14:42 GMT
புதுக்கோட்டை அருகே இன்று தற்காலிக டிரைவர் இயக்கிய அரசு பஸ்சும் -தனியார் பஸ்சும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் அதிர்ஷ்டவசமாக மாணவர்கள் மற்றும் பயணிகள் உயிர் தப்பினர்.

புதுக்கோட்டை:

அரசு போக்குவரத்து கழக ஊழியர்களின் தொடர் வேலை நிறுத்த போராட்டத்தால் பயணிகள் பெரும் அவதிக்கு ஆளாகியுள்ளனர். மக்களின் சிரமத்தை தவிர்க்கும் வகையில் தற்காலிக ஊழியர்கள் மூலம் அரசு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

ஆனால் போதிய அனுபவம் இல்லாத டிரைவர்களால் தினந்தோறும் விபத்துக்கள் நிகழ்ந்து வருகிறது. இதுவரை 3 பேர் பலியாகியும் உள்ளனர். அத்துடன் அரசு பேருந்துகளில் பயணம் செய்ய பொதுமக்கள் அச்சம் தெரிவித்து வருகிறார்கள்.

இந்த நிலையில் தஞ்சையில் இருந்து பட்டுக்கோட்டைக்கு இன்று காலை தனியார் பஸ் ஒன்று சென்று கொண்டிருந்தது. புதுக்கோட்டை மாவட்டம் ரெகு நாதபுரம் அருகே சென்ற போது அந்த வழியாக கறம்பக்குடியில் இருந்து தஞ்சையை நோக்கி தற்காலிக டிரைவர் ஓட்டிய அரசு பஸ் வந்தது. அதில் பள்ளிக்கு செல்லக்கூடிய மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் இருந்தனர்.

இந்நிலையில் எதிர்பாராத விதமாக 2 பஸ்களும் நேருக்கு நேர் மோதின. இதில் 2 பஸ்களின் முன் பகுதி கண்ணாடிகள் சுக்கு நூறாக நொறுங்கின. அதிர்ஷ்டவசமாக 2 பஸ்களிலும் இருந்த மாணவர்கள் மற்றும் பயணிகள் காயமின்றி உயிர் தப்பி னர். விபத்துக்குள்ளான அரசு பஸ் சாலையோர பள்ளத்தில் இறங்கி நின்றது.

இந்த விபத்தால் அப்ப குதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு போலீசார் சென்று போக்குவரத்தை சரி செய்தனர்.

இதனிடையே புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசலில் அரசு பேருந்தை தற்காலிக டிரைவர் ஒருவர் ஓட்டிச் சென்றார். அப்போது பஸ்சை பின்னோக்கி இயக்குவதில் தற்காலிக டிரைவர் திணறினார். இதன் காரணமாக அந்த வழியாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதையடுத்து அந்த வழியாக தனியார் பஸ்சை ஓட்டி வந்த டிரைவர் சந்துரு என்பவர், தான் ஓட்டி வந்த பஸ்சில் இருந்து இறங்கி அரசு பஸ் டிரைவருக்கு உதவி செய்தார். #tamilnews

Tags:    

Similar News