செய்திகள்

காஞ்சீபுரம்-திருவள்ளூர் மாவட்டத்தில் தற்காலிக டிரைவர்கள் மூலம் குறைவான பஸ்கள் ஓடின

Published On 2018-01-08 12:05 IST   |   Update On 2018-01-08 12:05:00 IST
காஞ்சீபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டத்தில் தற்காலிக டிரைவர்களால் குறைவான பேருந்துகள் மட்டுமே ஓடின. இதனால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.
காஞ்சீபுரம்:

போக்குவரத்து ஊழியர்களின் போராட்டம் இன்று 5-வது நாளாக நீடித்து வருகிறது. காஞ்சீபுரம் - திருவள்ளூர் மாவட்டத்தில் இன்றும் குறைவான பஸ்களே தற்காலிக டிரைவர்கள் மூலம் இயக்கப்பட்டன.

இதனால் பள்ளி, கல்லூரிக்கு செல்லும் மாணவ- மாணவிகளும், வேலைக்கு செல்வோரும் கடும் அவதி அடைந்தனர். பெரும் பாலானோர் மின்சார ரெயில்களில் பயணம் செய்ததால் அங்கும் கடும் நெரிசல் ஏற்பட்டது. அனைத்து ரெயில் நிலையங்களிலும் கூட்டம் அலைமோதியது.

காஞ்சீபுரம் மாவட்டத்தில் மொத்தம் உள்ள 11 பணிமனைகளில் 740 பஸ்கள் உள்ளன. இன்று தற்காலிக ஊழியர்கள் மூலம் 370 பஸ்கள் இயக்கப்பட்டன.

கிராமப்புறங்களுக்கு போக்குவரத்து நிறுத்தப்பட்டதால் பொது மக்கள் மிகவும் அவதி அடைந்தனர். அவர்கள் ஆட்டோ, வேன்களில் கூடுதல் கட்டணம் கொடுத்து பயணம் செய்யும் நிலை ஏற்பட்டது.

காஞ்சீபுரம் பஸ் நிலையத்தில் இன்று காலை பள்ளி, கல்லூரி மற்றும் வேலைக்கு செல்வோர் ஏராளமானோர் பஸ் கிடைக்காமல் தவிப்புடன் நின்றனர். நீண்ட நேரம் காத்திருந்து பஸ்களில் பயணம் செய்தனர். இதனால் பஸ்களில் கூட்டம் நிரம்பி வழிந்தது.

செங்கல்பட்டு பணிமனையில் 105 பஸ்களில் 20 பஸ்கள் மட்டும் தற்காலிக டிரைவர்கள் மூலம் இயக்கப் பட்டது.

இதனால் தனியார் வேன், ஷேர் ஆட்டோ, ஆட் டோக்களில் கூட்டம் அலைமோதியது.. தனியார் பஸ்கள் அதிக அளவில் ஓடின. கூடுதல் கட்டணம் வசூலித்ததால் பல பஸ்களில் பயணிகளுக் கும், கண்டக்டர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

மதுராந்தகம் பணிமனையில் இருந்து 54 பஸ்களில் 10 பஸ்கள் ஓடின.

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள 6 பணிமனைகளில் திருவள்ளூரில் 64, திருத்தணியில் 76, ஊத்துக் கோட்டையில் 46, பொன்னேரியில் 50, பொதட்டுர் பேட்டையில் 13 கோயம்பேடு பகுதி இரண்டு 28 என மொத்தம் 277 பஸ்கள் உள்ளன.

போக்குவரத்து தொழிலாளர்கள் போராட்டம் காரணமாக திருவள்ளூரில் 25, ஊத்துக்கோட்டையில் 20, திருத்தணியில் 43, பொதட்டுர் பேட்டையில் 5, பொன்னேரியில் 28 பஸ்களும் மொத்தம் 85 பஸ்கள் மட்டும் இயக்கப்பட்டன.

குறைவான பஸ்கள் ஓடியதால் பொதுமக்கள் ஆட்டோ, ஷேர் ஆட்டோக்களை தேடி ஓடினர். புறநகர் பகுதிக்கு செல்பவர்கள் மின்சார ரெயிலில் பயணம் செய்தனர். இதனால் திருவள்ளூர் ரெயில் நிலையம் பயணிகள் கூட்டத்தால் திக்குமுக்காடியது.

திருவள்ளூரில் இருந்து கிராமப்புறங்களுக்கு செல்லும் பொதுமக்கள் லோடு ஆட்டோ மற்றும் ஷேர் ஆட்டோக்களில் தொங்கியபடி ஆபத்தான பயணம் செய்தனர்.

மாணவர்கள் இலவச பஸ்பாசை அரசு பஸ்களில் காண்பித்தபோது அதனை ஏற்க தற்காலிக கண்டக்டர்கள் மறுத்துவிட்டனர். இதனால் மாணவ-மாணவிகள் கடும் அவதி அடைந்தனர்.

இது குறித்து பொதுமக்கள் கூறும்போது, ‘தற்காலிக டிரைவர்கள் ஓட்டும் பஸ்கள் விபத்தில் சிக்குவதாக கூறுகின்றனர். இதனால் குறைந்த அளவு பஸ்கள் ஓடினாலும் அதில் பயணம் செய்ய தயக்கமாக உள்ளது. தனியார்கள் பஸ்களில் வழக்கத்தை விட கூடுதல் கட்டணம் வசூலிக்கிறார்கள்.

இந்த போராட்டத்தால் பொதுமக்கள் தான் பாதிக்கப்படுகிறார்கள். போக்குவரத்து தொழிலாளர்கள் பிரச்சினைக்கு அரசு முடிவு எட்டவேண்டும்’ என்றனர்.

இந்த நிலையில் போக்குவரத்து தொழிலாளர்கள் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி திருவள்ளூர் மீரா திரையரங்கம் அருகே அனைத்து மத்திய தொழிற்சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் போக்குவரத்து ஊழியர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். அவர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோ‌ஷங்கள் எழுப்பினர்.

தாம்பரம் டெப்போவில் 90 பஸ்கள் இயக்கப்பட்டு வந்தது. இன்று 79 பஸ்கள் ஓடின. குரோம்பேட்டை பணிமனையில் 210 பஸ்களில் 110 பஸ்கள் இயங்கின.

பூந்தமல்லி பணிமனையில் 161 பஸ்களில் 80 பஸ்கள் ஓடின. குன்றத்தூர் பணிமனையில் 29 பஸ்களில் 22 பஸ்கள் இயக்கப்பட்டது.

பாடியநல்லூர் பணிமனையில் மொத்தம் 74 பஸ்கள் இயக்கப்பட்டு வந்தது. இன்று 36 பஸ்கள் மட்டும் தற்காலிக டிரைவர்கள் மூலம் இயக்கப்பட்டது.

திருவான்மியூர் டெப்போவில் 106 பஸ்களில் 7 வண்டிகளும், அடையாறு பணிமனையில் 142 பஸ்களில் 20 பஸ்களும் ஓடின. இதனால் பயணிகள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.

கோயம்பேடு பஸ்நிலையத்தில் இருந்து 40 சதவீத மாநகர பஸ்கள் ஓடின. சென்னை மாநகரத்துக்குள் 40 தனியார் பஸ்கள் இயக்கப்பட்டன.

இதேபோல ஆரணி, காஞ்சீபுரம், வேலூர், பாண்டிச்சேரி உள்ளிட்ட இடங்களுக்கு இன்று காலை நிலவரப்படி 50 தனியார் பஸ்கள் சென்றன. 30 அரசு விரைவு பஸ்கள் வெளியூர்களுக்கு புறப்பட்டன. #tamilnews

Similar News