செய்திகள்
பறிமுதல் செய்யப்பட்ட நட்சத்திர ஆமைகள்

பாங்காக் கடத்த முயன்ற 210 நட்சத்திர ஆமைகள் பறிமுதல்: 2 பேரிடம் விசாரணை

Published On 2017-12-11 08:23 GMT   |   Update On 2017-12-11 08:23 GMT
சென்னையில் இருந்து விமானம் மூலம் பாங்காக் கடத்த முயன்ற 210 நட்சத்திர ஆமைகள் பறிமுதல் செய்யப்பட்டது. 2 பேரிடமும் வேளச்சேரி வனச்சரக அதிகாரி விசாரணை நடத்தி வருகிறார்.

ஆலந்தூர்:

சென்னையில் இருந்து தாய்லாந்து தலைநகர் பாங்காக்குக்கு நட்சத்திர ஆமைகள் கடத்த இருப்பதாக அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. அதை தொடர்ந்து நேற்று இரவு சென்னை விமான நிலையத்தில் இருந்து பாங்காக் புறப்பட தயாராக இருந்த விமானத்தில் அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினார்கள்.

அப்போது பயணிகள் உடைமைகள் அனைத்தும் பரிசோதிக்கப்பட்டன. இந்த நிலையில் சென்னையை சேர்ந்த ஜாபர் அலி (33), முகமது தமீம் அன்சாரி (32) ஆகியோர் அதிகாரிகளிடம் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தனர்.

எனவே, அவர்கள் கொண்டுவந்த பார்சல் பிரித்து பார்க்கப்பட்டது. அதில் ‘சுவீட்பாக்ஸ்’கள் இருந்தன. அவற்றில் சுவீட் தவிர வேறு எதுவும் இல்லை. இருந்தாலும் சந்தேகத்தின் பேரில் அனைத்து பெட்டிகளும் பிரித்து பரிசோதிக்கப்பட்டது.

அடியில் இருந்த பெட்டிகளில் நட்சத்திர ஆமைகள் மறைத்து வைக்கப்பட்டிருந்தது கண்டு பிடிக்கப்பட்டது. அவை பாங்காக்குக்கு கடத்தப்பட இருந்தது. ஆகவே அவர்களிடம் இருந்து 210 நட்சத்திர ஆமைகள் பறிமுதல் செய்யப்பட்டது. அவற்றின் மதிப்பு ரூ.20 லட்சம் என மதிப்பிடப்பட்டுள்ளது. மேலும் ஜாபர் அலி, முகமது தமீம் அன்சாரி ஆகிய 2 பேரும் வேளச்சேரி வனச்சரக அதிகாரி முருகேசனிடம் ஒப்படைக்கப்பட்டனர். அவர்களிடம் அவர் விசாரணை நடத்தி வருகிறார்.

நட்சத்திர ஆமைகள் மருத்துவ குணம் உடையவை. வீட்டில் அவை செல்லப் பிராணிகளாக வளர்க்கப்படுகின்றன. எனவே இவை தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கு கடத்தப்பட்டு வருகின்றன.


Tags:    

Similar News