செய்திகள்

மனக்கசப்புகளுக்கு இடமின்றி கட்சி ஒற்றுமைக்காக பாடுபடுவேன்: ஓ.பன்னீர்செல்வம்

Published On 2017-11-29 10:29 IST   |   Update On 2017-11-29 10:29:00 IST
மனக்கசப்புகளுக்கு இடமின்றி கட்சி ஒற்றுமைக்காக பாடுபடுவேன் என்று மதுரையில் ஓ.பன்னீர்செல்வம் பேசினார்.

மதுரை:

மதுரை புறநகர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் தேர்தல் பணியாற்றுவது குறித்த ஆலோசனை கூட்டம் புறநகர் மாவட்டச் செயலாளர் ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. தலைமையில் நடந்தது.

மதுரை வடக்கு சட்டமன்ற தொகுதி அலுவலகத்தில் நடந்த இந்த கூட்டத்தில் கட்சியின் ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்-அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் பங்கேற்றார்.

மதுரை என்றாலே வரலாற்றிலும் சரி, அரசியலிலும் சரி முக்கியமான இடமாகும். கழகத்திற்கு பாதுகாப்பு அரணாக என்றைக்குமே மதுரை இருந்து வந்துள்ளது.

பல்வேறு சோதனைகளுக்கு பிறகு கழகம் இன்றைக்கு வெற்றி பாதைக்கு திரும்பி இருக்கிறது. புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்., புரட்சித்தலைவி அம்மா ஆகியோரின் வெற்றி சின்னமான இரட்டை இலையை மீட்டுள்ளோம்.

இன்றைக்கு என் மனதில் இருந்த சுமை எல்லாம் நீங்கிவிட்டது. மனக்கசப்புகளுக்கு இடமின்றி கட்சி ஒற்றுமைக்காக பாடுபடுவேன். இன்னும் 100 ஆண்டுகள் நம் இயக்கம் சிறப்புடன் செயல்படும்.

முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமியும், நானும் இரட்டைக்குழல் துப்பாக்கி போல செயல்படுவோம். கழகமும் இரட்டை இலையும் நம்மிடம் இருக்கும் இந்த நேரத்தில் மறைந்த அம்மா போட்டியிட்ட தொகுதியில் நாம் மீண்டும் வெற்றி பெற வேண்டும். இதற்காக நாம் ஒற்றுமையுடன் இணைந்து பணியாற்ற வேண்டும். நாம் ஒற்றுமையுடன் செயல்பட்டால் அ.தி.மு.க.வை எந்த கொம்பனாலும் வெல்ல முடியாது.

ஆர்.கே. நகரில் நாம் பெறும் வெற்றி அடுத்து வருகின்ற உள்ளாட்சி தேர்தல், நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க.வின் அமோக வெற்றிக்கு அடித்தளமாக இருக்க வேண்டும்.

வருகிற டிசம்பர் 5-ந் தேதி மறைந்த முதல்-அமைச்சர் அம்மாவின் நினைவு நாள். அன்றைக்கு சென்னையில் நடைபெறும் நினைவு ஊர்வலத்தில் தமிழகம் முழுவதிலும் இருந்து தொண்டர்கள் திரண்டு வந்து புகழஞ்சலி செலுத்த வேண்டும்.

ஆர்.கே. நகரில் அ.தி.மு.க. அமோக வெற்றி பெற்று அம்மாவின் ஆன்மாவுக்கு சமர்ப்பணம் செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

முன்னதாக வரவேற்று பேசிய மாவட்டச் செயலாளர் ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. பேசியதாவது:-

ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் அ.தி.மு.க. வேட்பாளர் வெற்றிக்காக மதுரை புறநகர் மாவட்ட அ.தி.மு.க. சிறப்பாக பணியாற்றும்.

கடந்த பல்வேறு இடைத் தேர்தல்களில் நமக்கு நல்ல அனுபவம் உண்டு. வாக்காளர்களை எப்படி சந்திக்க வேண்டும்? அரசின் சாதனைகளை எடுத்துக் கூறி எப்படி வாக்கு சேகரிக்க வேண்டும்? என்பது நமக்கு தெரியாதது அல்ல.

எனவே அ.தி.மு.க. அனைத்து வேட்பாளர்களையும் டெபாசிட் இழக்கச் செய்து வெற்றி சரித்திரம் படைத்தது என்ற பெருமையை நாம் பெற வேண்டும்.

அ.தி.மு.க.வை காப்பாற்ற முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியும், துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வமும் தியாக உணர்வோடு இணைந் திருக்கிறார்கள். அவர்களுடன் நாமும் ஒருங்கிணைந்து வெற்றி சரித்திரம் படைப்போம்.

இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்தில் அமைச்சர் உதயகுமார், கோபால கிருஷ்ணன் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் சரவணன், மாணிக்கம், பெரியபுள்ளான், நீதிபதி, முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் முத்துராமலிங்கம், பாண்டியம்மாள், நிர்வாகிகள் வக்கீல் ரமேஷ், நிலையூர் முருகன், வெற்றிவேல் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Similar News