செய்திகள்

நாகை அருகே அரசு பஸ் டயர் கழன்று ஓடியது: பயணிகள் உயிர் தப்பினர்

Published On 2017-11-19 17:53 GMT   |   Update On 2017-11-19 17:53 GMT
நாகை அருகே அரசு பஸ் வளைவில் திரும்பிய போது டயர் கழன்று ஓடியதால் பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
நாகை:

நாகையில் இருந்து அரசு பஸ் ஒன்று கும்பகோணத்திற்கு புறப்பட்டு சென்றது. அகரகடம்பனூரை சேர்ந்த பாலகுரு என்பவர் அந்த பஸ்சை ஓட்டி சென்றார். திருவாரூரை சேர்ந்த குணசேகரன் கண்டக்டராக பணியாற்றினார். பஸ்சில் சுமார் 40-க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர்.

கீழ்வேளூர் பஸ் நிறுத்தத்தின் அருகில் அரசாணி குளம் பகுதியில் ஒரு வளைவில் பஸ் திரும்பியது. அப்போது பஸ்சுக்கு முன்னால் பஸ்சின் டயர் வேகமாக உருண்டு சென்று புதருக்குள் விழுவதை கண்ட டிரைவர் அதிர்ச்சியடைந்தார். அது தனது பஸ்சின் முன்பக்க டயர் தான் என்பதையும், அது எப்படியோ கழன்று ஓடி புதருக்குள் விழுந்துள்ளது என்பதையும் உணர்ந்த டிரைவர் பாலகுரு உடனடியாக சமயோஜிதமாக பஸ்சை சாலையோரம் பாதுகாப்பாக நிறுத்தினார்.

அதனால் பயணிகள் அனைவரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். பின்னர் பயணிகள் இறக்கிவிடப்பட்டு மாற்று பஸ்சில் ஏற்றிவிடப்பட்டனர். விபத்தின்றி பஸ்சை சாமர்த்தியமாக நிறுத்திய டிரைவர் பாலகுருவை பயணிகள் பாராட்டி சென்றனர்.

இதுபற்றி தகவல் கிடைத்ததும் கீழ்வேளூர் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர்.
Tags:    

Similar News