செய்திகள்

மழை வெள்ளத்தில் மூழ்கிய பயிர்கள்: வேளாண்மை உற்பத்தி ஆணையர் சுகன்தீப்சிங்பேடி ஆய்வு

Published On 2017-11-18 14:49 IST   |   Update On 2017-11-18 14:49:00 IST
நாகை மாவட்டம் வேதாரண்யம் பகுதிகளில் பாதிக்கப்பட்ட வயல்களை வேளாண்மை உற்பத்தி ஆணையரும், முதன்மை செயலாளருமான ககன்தீப்சிங்பேடி பார்வையிட்டார்.
வேதாரண்யம்:

டெல்டா மாவட்டங்களான தஞ்சை, திருவாரூர், நாகை மாவட்டங்களில் வடகிழக்கு பருவமழை காரணமாக சம்பா சாகுபடி பயிர்கள் மழை வெள்ளத்தில் மூழ்கின. இதையொட்டி நாகை மாவட்டம் தலை ஞாயிறு, வேதாரண்யம் பகுதிகளில் பாதிக்கப்பட்ட வயல்களை வேளாண்மை உற்பத்தி ஆணையரும், முதன்மை செயலாளருமான ககன்தீப்சிங்பேடி பார்வையிட்டார். அப்போது அழுகிய பயிர்களை வயலில் இருந்து எடுத்து விவசாயிகள் காண்பித்தனர்.

மழைநீர் சூழ்ந்து பயிர்கள் அழுகிப்போனதற்கு வடிகால் வசதி இல்லாததுதான் காரணம். கடந்த ஆண்டுக்கான வறட்சி நிவாரணம் இதுவரை வரவில்லை என்று விவசாயிகள் வேதனையுடன் தெரிவித்தனர். பின்பு பிராந்தியங்கரை தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் விவசாயிகள் பயிர் காப்பீடு செய்வது குறித்து ஆய்வு மேற்கொண்டார். அப்போது பருவமழையில் பாதித்த சம்பா சாகுபடியை பார்வையிட்டு விவசாயிகள் அனைவரும் நவம்பர் 30-ம் தேதிக்குள் பயிர் காப்பீடு செய்துகொள்ள வேண்டும் என கூறினார்.

இந்த ஆய்வின் போது அமைச்சர் ஓ.எஸ்.மணியன், மாவட்ட கலெக்டர் சுரேஷ்குமார், வேளாண்மைத்துறை இயக்குநர் சந்திரகாசன், வருவாய் கோட்டாட்சியர் கண்ணன், மாவட்ட முன்னாள் ஊராட்சி உறுப்பினர் ரவிச்சந்திரன், பிராந்தியங்கரை கூட்டுறவு சங்கத்தலைவர் ஜெயபாரதிஆறுமுகம் தலைஞாயிறு கூட்டுறவு சங்க தலைவர் அவ்வை பாலசுப்பிரமணியன் மற்றும் அனைத்துத்துறை அதிகாரிகள் உடன் சென்றனர். பின்னர் சுகன்தீப்சிங்பேடி கூறியதாவது:-

வறட்சி நிவாரணம் பணம் வந்துவிட்டது. கணக்கை சரிபார்த்து வழங்கப்படும், இந்த ஆண்டு மழை வெள்ளத்தால் பாதித்த சம்பா பயிர்கள் தண்ணீர் வடிந்தவுடன் விரைவில் கணக்கு எடுக்கப்படும். முற்றிலும் சம்பா பயிர் அழிந்ததால் நாகை மாவட்டத்தில் குளம் குட்டை ஆறுகளில் உள்ள தண்ணீரை வைத்து மூன்றாம் போக சாகுபடி செய்வதற்கு விவசாயிகளுக்கு இலவசமாக விதை நெல் வழங்க முதலமைச்சரை சந்தித்து ஏற்பாடு செய்யப்படும்.

மூன்றாம் போக சாகுபடிக்காக தண்ணீர் போதவில்லை என்றால் ஜனவரி மாதத்தில் கல்லணையில் இருந்து தண்ணீர் திறக்கவும் ஏற்பாடு செய்யப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Similar News