செய்திகள்
விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் கைதாகி சென்ற வேனை பா.ஜனதாவினர் கல்வீசி தாக்கிய காட்சி.

மயிலாடுதுறையில் தமிழிசைக்கு கருப்பு கொடி: வி.சி. கட்சியினர் 6 பேர் கைது

Published On 2017-10-27 15:09 IST   |   Update On 2017-10-27 15:09:00 IST
மயிலாடுதுறை வந்த தமிழிசை சவுந்தரராஜனுக்கு கருப்பு கொடி காட்டிய விடுதலை சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த 6 பேரை போலீசார் கைது செய்தனர்.
மயிலாடுதுறை:

பா.ஜனதா கட்சியின் மாநில இளைஞரணி செயலாளர் சீர்காழி சரண்ராஜின் திருமண விழா மயிலாடுதுறை ஏ.வி.சி. திருமண மண்டபத்தில் இன்று காலை நடந்தது.

இதில் கலந்து கொள்வதற்காக பா.ஜனதா மாநில தலைவர் தமிழிசை சவுந்தர்ராஜன் மற்றும் நிர்வாகிகள் காரில் வந்தனர்.

அப்போது மயிலாடுதுறை காந்திஜி சாலையில் தமிழிசையின் கார் வந்த போது அங்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மண்டல ஒருங்கிணைப்பாளர் வேலு.குபேந்திரன் தலைமையில் 6 பேர் திடீரென தமிழிசைக்கு கருப்பு கொடி காட்டினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

அப்போது அவர்கள் தலைவர் திருமாவளவனுக்கு எதிராக கருத்துக்களை கூறி வரும் தமிழிசைக்கு கண்டித்து கோ‌ஷங்களை எழுப்பினர்.

இதை பார்த்த தமிழிசையுடன் பின்னால் காரில் வந்த பா.ஜனதா நிர்வாகிகள், தொண்டர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

உடனே கருப்பு கொடியை காட்டிய விடுதலை சிறுத்தைகள் கட்சியினரை தாக்கினர். இதில் அவர்களும் பதிலுக்கு தாக்கியதால் அந்த இடத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

அப்போது பாதுகாப்புக்கு வந்த போலீசார் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் 6 பேரையும் வலுக்கட்டாயமாக பிடித்து அந்த வழியாக வந்த ஒரு தனியார் வேனில் ஏற்றினர்.

இதனால் பா.ஜனதாவினர் மேலும் ஆத்திரம் அடைந்து வேனில் கண்ணாடியை உடைத்தனர்.

இதையொட்டி அசம்பாவிதத்தை தடுக்க போலீசார் வேனில் விடுதலை கட்சியினரை ஏற்றி புறப்பட்டு சென்றனர்.

இந்த சம்பவத்தால் மயிலாடுதுறை பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Similar News