செய்திகள்

திருமண பதிவு சான்றிதழ் வழங்க ரூ.1,600 லஞ்சம் வாங்கிய சார்பதிவாளர், உதவியாளர் கைது

Published On 2017-10-24 03:13 GMT   |   Update On 2017-10-24 03:13 GMT
திருமண பதிவு சான்றிதழ் வழங்க ரூ.1,600 லஞ்சம் வாங்கிய சார்பதிவாளர் மற்றும் அலுவலக உதவியாளரை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கைது செய்தனர்.
பெரம்பலூர்:

பெரம்பலூர் மாவட்டம் குன்னம் தாலுகா லெப்பைக்குடிகாட்டை சேர்ந்தவர் முகமது மன்சூர் அலி (வயது 29). இவரது மனைவி சபீதா பானு (22). முகமது மன்சூர் அலி தனது திருமணத்தை பதிவு செய்வதற்கான சான்றிதழ் கேட்டு வாலிகண்டபுரம் சார்பதிவாளர் அலுவலகத்தில் விண்ணப்பித்து இருந்தார்.

திருமண பதிவு சான்றிதழ் கொடுக்க வேண்டும் என்றால் ரூ.3 ஆயிரம் தரவேண்டும் என்று சார்பதிவாளர் பாண்டிசெல்வம் (45) கூறியுள்ளார். அதற்கு முகமது மன்சூர் அலி, நான் ரூ.1,600 தருகிறேன் என தெரிவித்துள்ளார்.

இதையடுத்து லஞ்சம் கொடுக்க விரும்பாத அவர், இதுகுறித்து அரியலூரில் உள்ள லஞ்ச ஒழிப்புத்துறை போலீசில் புகார் செய்தார். பின்னர் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் ஆலோசனைப்படி ரசாயனப் பொடி தடவிய ரூபாய் நோட்டுகளை முகமது மன்சூர் அலி, நேற்று வாலிகண்டபுரம் சார்பதிவாளர் அலுவலகத்தில் சார்பதிவாளரிடம் கொடுக்க சென்றார்.

அப்போது சார்பதிவாளர் பாண்டிசெல்வம், பணத்தை அருகில் உள்ள அலுவலக தற்காலிக உதவியாளர் முரளியிடம் கொடுக்குமாறு கூறினார். இதையடுத்து முகமது மன்சூர் அலி பணத்தை முரளியிடம் கொடுத்தார். அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் விரைந்து வந்து கையும், களவுமாக பாண்டிசெல்வத்தையும், முரளியையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

தொடர்ந்து 2.30 மணியில் இருந்து இரவு 8 மணி வரை சார்பதிவாளர் பாண்டிசெல்வத்திடமும், உதவியாளர் முரளியிடமும், சார்பதிவாளர் அலுவலகத்தில் வைத்து லஞ்ச ஒழிப்பு போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். பின்னர் பாண்டிசெல்வத்தையும், முரளியையும் போலீசார் அரியலூர் லஞ்ச ஒழிப்பு அலுவலகத்திற்கு கொண்டு சென்றனர்.

அப்போது சார்பதிவாளர் அலுவலகத்தின் முன்பு சிலர் பட்டாசு வெடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
Tags:    

Similar News