செய்திகள்

பின்லாந்தில் மாயமான சென்னை என்ஜினீயர் பலி

Published On 2017-09-23 14:41 IST   |   Update On 2017-09-23 14:41:00 IST
பின்லாந்தில் மாயமான சென்னை என்ஜினீயர் கெல்சிங்கு கடலில் இறந்த நிலையில் பிணமாக மீட்கப்பட்டார்.
சென்னை:

சென்னையை சேர்ந்த கம்ப்யூட்டர் என்ஜினீயர் ஹரிசுதன்(26) இவர் டி.சி.எஸ். நிறுவனத்தில் பணிபுரிந்தார்.

பணி நிமித்தமாக பின்லாந்தில் உள்ள நிறுவனத்துக்கு கடந்த பிப்ரவரி மாதம் அனுப்பி வைக்கப்பட்டார். தலைநகர் ஹெல்சிங்கியில் பணிபுரிந்து வந்த அவர் கடந்த 8-ந்தேதி முதல் திடீரென மாயமானார்.

மாயமான அன்று அவர் சென்னையில் உள்ள தனது தாயாரிடம் டெலிபோனில் பேசினார். அதன்பிறகு அவரை காணவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் இந்திய தூதரகம் மூலம் பின்லாந்து போலீசில் புகார் செய்தனர்.

எனவே அவரை போலீசார் தேடிவந்தனர். இதற்கிடையே அவர் நேற்று கெல்சிங்கு கடலில் இறந்த நிலையில் பிணமாக மிதந்தார். தகவல் அறிந்ததும் போலீசார் விரைந்து சென்று பிணத்தை கைப்பற்றி விசாரணை நடத்தினார்கள்.

இத்தகவலை பின்லாந்துக்கான இந்திய தூதர் வாணிராவ் உறுதி செய்துள்ளார். வார இறுதி நாட்களில் ஹரிசுதன் தனது நண்பர்களுடன் வெளியில் சென்று வருவது வழக்கம். அவ்வாறு சென்றவர் மறுநாள் திங்கட்கிழமை அலுவலகத்துக்கு வரவில்லை.

இதுகுறித்து டி.சி.எஸ். நிறுவன ஊழியர்கள் இந்திய தூதரகத்துக்கு தெரிவித்தனர். அதன்பிறகு மறுநாள் போலீசில் புகார் செய்யப்பட்டது. கடந்த 2 மாதத்துக்கு முன்பு அவர் சென்னை வந்து சென்றதாக தந்தை ஸ்ரீபால கிருஷ்ணா தெரிவித்தார்.

Similar News