பாராளுமன்ற தேர்தலோடு தமிழக சட்டசபைக்கும் தேர்தல் நடக்கும்: அன்புமணி பேச்சு
சிதம்பரம்:
கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் பா.ம.க. பிரமுகர் திருமணம் இன்று நடந்தது. இதில் கலந்து கொண்ட பட்டாளி மக்கள் கட்சி இளைஞரணி செயலாளரும், நாடளுமன்ற உறுப்பினருமான அன்புமணி ராமதாஸ் பேசியதாவது:-
தமிழகத்தில் ஜனநாயக முறைப்படி ஆட்சி நடை பெறவில்லை. ஜனநாயகத்துக்கு எதிரான ஆட்சி நடைபெறுகிறது. 19 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவை வாபஸ் பெற்ற நிலையில் தமிழக அரசு தனது மெஜாரிட்டியை நிரூபிக்க கவர்னர் உத்தரவிட்டிருக்க வேண்டும். அதுபோல் செய்யாதது ஜனநாயகத்துக்கு எதிரான செயலாகும்.
அ.தி.மு.க.வுக்கு இரட்டை இலை சின்னம் ஒதுக்கப்படாத வரை உள்ளாட்சி தேர்தலை நடத்த மாட்டார்கள். பாராளுமன்ற தேர்தலையொட்டி தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலும் நடைபெறும் சூழ்நிலை உருவாகும்.
சிதம்பரம் அண்ணா மலை பல்கலைக்கழகத்தில் மருத்துவ மாணவர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். அவர்களின் கோரிக்கையான அரசு கட்டணத்தை அமுல்படுத்த தமிழக அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
8 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அண்ணாமலை பல்கலைக்கழக ஊழியர்களுக்கு மாதாந்திர சம்பளம் வழங்க முடியாத சூழ்நிலை உள்ளது. மொத்தத்தில் தமிழக அரசு ஒரு செயல்படாத அரசாக உள்ளது. தமிழகத்தில் தேக்கமான மந்தநிலையே நிலவி வருகிறது.
தமிழகத்தில் தினம் தினம் மக்கள் அவதிக்குள்ளாகிறார்கள். இந்த நிலைக்கு மக்கள்தான் காரணம். 50 ஆண்டு காலம் திராவிட கட்சிகளுக்கு வாக்கு அளித்த நீங்கள் வெறும் சின்னத்தை மட்டுமே பார்த்து வாக்களித்தீர்கள். வரும் காலங்களிலாவது எங்களது திட்டங்களை படித்து பார்த்து பட்டாளி மக்கள் கட்சிக்கு வாக்களித்து 5 ஆண்டு காலம் வாய்ப்பு தாருங்கள்.
தமிழகத்தில் 50 ஆண்டு காலம் நடைபெற்ற ஊழலுடன் கூடிய மலிவான ஆட்சியை மாற்றி வளர்ச்சிப் பாதைக்கு தமிழகத்தை கொண்டு செல்வோம். தமிழகத்தில் ஒரு கோடியே 40 லட்சம் இளைஞர்கள் வேலைவாய்ப்பு இல்லாமல் இருக்கின்றனர்.
நாங்கள் ஆட்சிக்கு வந்தால் அந்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்தி தருவோம். கடலூர் மாவட்ட டெல்டா பாசன விவசாயிகள் தற்கொலை செய்து கொள்ளும் சூழ்நிலை நிலவி வருகிறது.
கடலூர், நாகை மாவட்டங்களில் 45 கிராமங்களில் பெட்ரோலிய கெமிக்கல் திட்டம் அமுல்படுத்தப்படும் நிலையில் உள்ளது. இதற்காக 57 ஏக்கர் நிலங்கள் பயன்பாட்டிற்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இதை பா.ம.க. கடுமையாக எதிர்க்கும்.
அதேபோல் வெகுவிரைவில் ஓ.என்.சி. நிறுவனத்தை இந்த மாவட்டத்தில் இருந்து அப்புறப்படுத்துவோம்.
அப்போதைய மத்திய அரசு நீட் தேர்வு கொண்டு வர முயற்சி செய்தது. அதனை நான் மத்திய அமைச்சராக இருந்த போது பா.ம.க. சார்பில் எதிர்ப்பு தெரிவித்தேன். தற்போது மத்திய பா.ஜ.க. அரசு நீட் தேர்வை கொண்டு வந்த போதும் பா.ம.க.தான் முதலில் எதிர்ப்பு தெரிவித்தது. நீட் தேர்வுக்கு எதிராக பா.ம.க.வின் போராட்டம் கண்டிப்பாக நடைபெறும்.
இவ்வாறு அவர் பேசினார்.