செய்திகள்

குடிபோதையில் பெண்ணிடம் சில்மிஷம் செய்த போலீஸ்காரருக்கு தர்மஅடி

Published On 2017-09-07 16:17 IST   |   Update On 2017-09-07 17:56:00 IST
சிதம்பரம் அருகே குடிபோதையில் வீட்டுக்குள் புகுந்து பெண்ணிடம் சில்மிஷம் செய்த போலீஸ்காரரை பொதுமக்கள் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
கடலூர்:

சிதம்பரம் அருகே உள்ள கிள்ளை போலீஸ் நிலையத்தில் பணியாற்றும் போலீஸ்காரர் ஒருவர் கடலூர் மஞ்சக்குப்பத்தில் வசிக்கிறார். நேற்று இரவில் அவர் புதுவைக்கு சென்று மது குடித்து விட்டு மோட்டார் சைக்கிளில் கடலூர் ஆல்பேட்டைக்கு வந்தார்.

குடிபோதையில் அங்கு வந்த அவர் அங்குள்ள ஒரு குடிசை வீட்டுக்குள் புகுந்தார். அங்கு இருந்த பெண்ணிடம் அவர் சில்மி‌ஷம் செய்ததாக கூறப்படுகிறது. இதனால் அந்த பெண் அதிர்ச்சியில் கூச்சலிட்டார். உடனே தெருவில் இருந்த பொதுமக்கள் ஓடிவந்து போலீஸ்காரரை மடக்கி பிடித்தனர். ஆத்திரத்தில் அவருக்கு தர்ம அடி கொடுத்தனர்.

தகவல் அறிந்து அங்கு வந்த போலீஸ்காரர்கள் அவரை மீட்டு சோதனைச்சாவடிக்கு அழைத்து வந்து அமர வைத்தனர்.

குடிபோதையில் வீட்டுக்குள் புகுந்த போலீஸ்காரர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி சோதனைச்சாவடியை முற்றுகையிட்டு, பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் கடலூர்-புதுவை சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதையடுத்து சம்பவ இடத்துக்கு புதுநகர் இன்ஸ்பெக்டர் சரவணன் விரைந்து வந்து பொதுமக்களை சமாதானப்படுத்தினார். பின்னர் சம்பந்தப்பட்ட போலீஸ்காரரை புதுநகர் போலீஸ் நிலையத்துக்கு போலீசார் அழைத்துச் சென்றனர். இதன்பிறகே பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

Similar News