செய்யூர் அருகே மோதல்: மீனவர்கள் கொலையில் 4 பேர் கைது
மதுராந்தகம்:
செய்யூர் அருகே உள்ளது கடப்பாக்கம் குப்பம், ஆலம் பரகுப்பம். இந்த இரு கிராமத்தினர் இடையே சினிமா சூட்டிங் எடுக்கும் குழுவினர் கொடுக்கும் பணத்தை பிரிப்பதில் தகராறு ஏற்பட்டு வந்தது.
நேற்று அதிகாலை இது பயங்கர மோதலாக வெடித்தது. 2 மீனவ கிராமத்தினரும் பயங்கர ஆயுதங்களால் மோதிக் கொண்டனர்.
இதில் கடப்பாக்கத்தை சேர்ந்த சேகர்(35), ராம கிருஷ்ணன்(34) ஆகிய 2 பேர் வெட்டிக்கொலை செய்யப்பட்டனர்.
மேலும் அதே கிராமத்தை சேர்ந்த ராஜாராம், மதன், குமார் உள்பட 15 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்களுக்கு புதுச்சேரி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த மோதலில் 50-க்கும் மேற்பட்ட படகுகள், மோட்டார் சைக்கிள்கள் தீ வைத்து எரிக்கப்பட்டது. ஏராளமான வீடுகளும் நொறுக்கப்பட்டன. இதனால் அப்பகுதியில் பதட்டமான நிலை ஏற்பட்டது. ஏராளமான போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டனர்.
இது குறித்து சூனாம்பேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இது தொடர்பாக ஆலம்பர குப்பத்தை சேர்ந்த தங்கபாபு, சரவணன், சிவா, சுரேஷ், ஆகிய 4 பேர் கைது செய்யப்பட்டனர். 10- க்கும் மேற்பட்டோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.
இச்சம்பவத்தால் கடப்பாக்கம், ஆலம்பர குப்பம் பகுதியில் தொடர்ந்து பதட்டமான நிலைநீடித்து வருகிறது. டி.எஸ்.பி. ராஜேந்திரன் தலைமையில் 100-க்கும் மேற்பட்ட போலீசார் மீனவ கிராமங்களில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
மோதலால் பாதிக்கப்பட்ட 2 கிராமங்களிலும் மீனவர்கள் யாரும் கடலுக்குள் மீன் பிடிக்க செல்லவில்லை. ஏராளமானோர் வீடுகளை காலி செய்து வெளியூரில் உள்ள உறவினர்கள் வீடுகளுக்கு சென்று உள்ளனர். வெளி நபர்கள் யாரையும் மீன வர்கள் கிராமத்துக்கு நுழைய போலீசார் அனுமதிக்கவில்லை.
இதனால் மீனவர் கிராமங்களில் பரபரப்பான நிலையே நீடித்து வருகிறது.