செய்திகள்

ஆட்சி கலையும் என்று யாரும் கனவு காண வேண்டாம்: செங்கோட்டையன் ஆவேச பேச்சு

Published On 2017-08-28 10:30 IST   |   Update On 2017-08-28 10:30:00 IST
அ.தி.மு.க. ஆட்சி கலைந்து விடும் என யாரும் கனவு காண வேண்டாம் அது பலிக்காது என அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கூறினார்.
கோபி:

ஈரோடு வடக்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா ஆலோசனை கூட்டம் கோபியில் நடந்தது. மாவட்ட செயலாளரும் அமைச்சருமான கே.சி.கருப்பணன் தலைமை தாங்கினார்.

இதில் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கலந்து கொண்டு பேசினார். அவர் கூறியதாவது:-

புரட்சிதலைவர், புரட்சி தலைவி கண்ட அ.தி.மு.க. ஆட்சி மக்கள் ஆட்சி. அ.தி.மு.க. தமிழகத்தில் இன்னும் தொடர்ந்து எக்கு கோட்டையாகவே உள்ளது. இந்த ஆட்சி மெஜாரிட்டி இழந்து விடும் கலைந்து போகும் என மனப்பால் குடிக்கிறார்கள். கற்பனை கனவு காண்கிறார்கள். இந்த கனவு ஒருபோதும் பலிக்கப்போவது இல்லை.

அ.தி.மு.க.வுக்கு தற்போது சோதனைதான் வந்துள்ளதே தவிர எந்தஒரு தொண்டனும் மாற்றுக் கட்சிக்கு சென்றது கிடையாது, செல்லவும் மாட்டான்.

இந்த ஆட்சி நீடிக்கும் என்ற அ.தி.மு.க. தொண்டர்களுடைய கனவுகள் நிறைவேறும். ஈரோட்டில் வரும் 6-ந்தேதி நடக்கும் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவுக்கு அ.தி.மு.க. தொண்டர்கள் திரளாக பங்கேற்க வேண்டும்.

எங்களுக்கு தற்போது பல்வேறு சோதனைகள் வந்துள்ளது உண்மைதான். ஒருசிலர் இந்த ஆட்சி நீடிக்காது என பேசி வருகிறார்கள். இந்த சோதனைகளையெல்லாம் தகர்த்தெறிந்து சாதனை வரலாற்றை படைப்போம். 4 ஆண்டு மட்டுமல்ல தொடர்ந்து 400 ஆண்டுகள் இந்த ஆட்சி நீடிக்கும்.

இவ்வாறு செங்கோட்டையன் பேசினார்.

Similar News