செய்திகள்
போராட்டம் நடத்திய தொழிலாளர்களுடன் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர்.

நெய்வேலி என்.எல்.சி. ஒப்பந்த தொழிலாளர்கள் மீண்டும் போராட்டம்

Published On 2017-08-04 16:50 IST   |   Update On 2017-08-04 16:50:00 IST
நெய்வேலி என்.எல்.சி.யில் வழக்குப்பதிவு செய்யப்பட்ட 3 பேருக்கு பணி வழங்க கோரி ஒப்பந்த தொழிலாளர்கள் மீண்டும் போராட்டடத்தில் ஈடுபட்டனர்.
நெய்வேலி:

நெய்வேலி என்.எல்.சி. சுரங்கம் 1-ஏ பகுதியில் வேலை செய்யும் 2,500-க்கும் மேற்பட்ட ஒப்பந்த தொழிலாளர்கள் கடந்த 12-ந்தேதி முதல் தங்களுக்கு முழுமையாக 26 நாட்கள் பணி வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கடந்த 13-ந்தேதி அவர்கள் என்.எல்.சி. அதிகாரிகளை சுரங்கும் 1-ஏ அலுவலகத்தில் சிறை பிடித்து போராட்டம் நடத்தினர். அதன் பின்னர் ஒப்பந்த தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம், மறியல் போன்று பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர்.

இந்த நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு மாவட்ட கலெக்டர் ராஜேஷ், என்.எல்.சி. தொழிற்சங்க நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். அதில் சுமூக உடன்பாடு ஏற்பட்டது.

தொழிலாளர்களுக்கு 26 நாட்கள் பணி வழங்கப்படும் என்றும், போராட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட மாட்டாது என்றும் உறுதி அளித்தார். அதனை ஏற்றுக்கொண்ட தொழிற் சங்க நிர்வாகிகள் 22 நாட்களாக நடத்தி வந்த போராட்டத்தை வாபஸ் பெற்று பணிக்கு செல்வதாக அறிவித்தனர்.

அதனை தொடர்ந்து நேற்று முன்தினம் இரவு முதல் ஒப்பந்த தொழிலாளர் பணிக்கு திரும்பினர். இந்த நிலையில் போராட்டத்தின் போது அதிகாரிகளை சிறைபிடித்த தொழிலாளர்கள் அந்தோணிராஜ், பூவராகவன், சங்கர் ஆகியோர் மீது என்.எல்.சி. அதிகாரிகள் புகார் கொடுத்ததின் பேரில் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு இருந்தது. அவர்கள் நேற்று காலை பணிக்கு வந்தனர். அவர்கள் பணி செய்ய அனுமதிக்கப்படவில்லை. தடையில்லா சான்று பெற்றுவர வேண்டும் என்று ஒப்பந்ததாரர்கள் கூறினார்கள்.

இதை கண்டித்து தொழிலாளர்கள் மீண்டும் போராட்டம் நடத்த முடிவு செய்தனர். அதன்படி சுரங்கம் 1-ல் இன்று உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட னர்.

போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களுடன் அதிகாரிகள் மற்றும் தொழிற் சங்க பிரமுகர்கள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

இது குறித்து ஏ.ஐ.டி.யூ,சி. மாவட்ட செயலாளர் சேகர் கூறியதாவது:-

தொழிலாளர்கள் 3 பேர் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டதற்காக அவர்களுக்கு அனுமதி பாஸ் வழங்கப்படவில்லை.

மாவட்ட நிர்வாகம் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்பட மாட்டாது என்று உத்தரவாதம் அளித்து இருந்தது.

இந்த நிலையில் தொழிலாளர்கள் மீது நடவடிக்கை எடுத்து, பணி தர மறுப்பது மீண்டும் தொழிலாளர்களுக்கிடையே குழப்பமான சூழ்நிலையை ஏற்படுத்தியுள்ளது. எனவே, என்.எல்.சி. நிர்வாகம் உடனடியாக இந்த பிரச்சனைக்கு சுமூக தீர்வு காண வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

தொழிலாளர்கள் போராட்டத்தையொட்டி என்.எல்.சி. சுரங்கத்துக்குள் மத்திய பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். சுரங்கத்துக்கு வெளியே நெய்வேலி போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Similar News