ஏலகிரி மலையில் போலீஸ் வேனில் தேக்கு மரங்கள் வெட்டி கடத்தல்: 2 போலீஸ்காரர்கள் கைது
திருப்பத்தூர்:
வேலூர் மாவட்டம் ஜோலார்பேட்டை ஏலகிரி மலையில் கோட்டூர் என்ற பகுதியில் வனத்துறைக்கு சொந்தமான நச்சுத் காப்புக் காடு உள்ளது.
இதில் சந்தன மரங்கள் மற்றும் தேக்கு மரங்கள் உள்பட பல்வேறு வகை மரங்கள் ஏராளமாக அடர்ந்து வளர்ந்துள்ளன.
நச்சுத் காப்புக் காட்டில் நள்ளிரவு 1 மணியளவில் மரங்கள் வெட்டி கடத்தப்படுவதாக திருப்பத்தூர் வனத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து, வனவர் பரமசிவம் தலைமையில் உதவி வன பாதுகாவலர் முகம்மது ரபீக், வனவர்கள் பிரபு, பரந்தாமன் உள்ளிட்ட வனத்துறையினர் ஏலகிரி மலைக்கு விரைந்து சென்றனர்.
காப்புக் காட்டிற்குள் வனத்துறையினர் நுழைந்த போது, ஆயுதப்படைக்கு சொந்தமான போலீஸ் வேன் நின்று கொண்டிருந்தது. 10-க்கும் மேற்பட்ட கும்பல், தேக்கு மரங்களை வெட்டி போலீஸ் வேனில் அடுக்கி கடத்துவதற்கு தயாராகி கொண்டிருந்தனர்.
வனத்துறையினர் நெருங்கி சென்றபோது, மரங்களை வெட்டிய கும்பல் தலைத்தெறிக்க தப்பி ஓட முயன்றது. வனத்துறையினர் விரட்டியதில் 2 பேர் மட்டுமே பிடிபட்டனர். மற்றவர்கள் தப்பிவிட்டனர்.
பிடிபட்டவர்கள் ஏலகிரி மலை நிலாவூரை சேர்ந்த கோவிந்தராஜ் மகன் வேல்முருகன் (வயது 28), தர்மபுரி மாவட்டம் பாப்பி ரெட்டிப்பட்டி அருகே உள்ள இருளபட்டி கிராமத்தை சேர்ந்த பால கிருஷ்ணன் மகன் தம்பிதுரை (27) என்பது தெரியவந்தது.
இருவரும் கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளியில் ஆயுதப்படை பிரிவு 7-வது பட்டாலியனில் போலீஸ்காரர்களாக பணியாற்றுகிறார்கள்.
காவல்துறைக்கு தேவையான தேக்கு மரங்களை உயர் அதிகாரிகள் உத்தரவின் பேரிலேயே வெட்டியதாக கூறி வனத்துறையினரிடம் அவர்கள் கடும் வாக்குவாதம் செய்தனர்.
வனத்துறைக்கு சொந்தமான மரங்களை வெட்டுவதற்கு காவல் துறைக்கு அதிகாரம் இல்லை. மரங்களை வெட்ட சொன்ன அதிகாரி யார்? நள்ளிரவில் மரங்களை வெட்டியது ஏன்? என்று கேட்டு வனத்துறையினரும் பதிலுக்கு வாக்குவாதம் செய்தனர்.
பதில் அளிக்க முடியாமல் திணறிய 2 போலீஸ்காரர்களிடம் கிடுக்கிப்பிடி விசாரணை மேற்கொண்டனர். அதில், பிடிபட்ட போலீஸ்காரர் வேல்முருகனின் வீடு ஏலகிரி மலையில் இருப்பதால், அவர் மூலமே தேக்கு மரங்களை வெட்டி கடத்த திட்டமிட்டுள்ளனர்.
ஆயுதப்படையில் தன்னுடன் பணிபுரியும் தம்பிதுரையிடம், சந்தன மற்றும் தேக்கு மரங்களை கடத்தி விற்றால் மாத சம்பளத்தை விடமும் அதிக பணம் கிடைக்கும். சொகுசு வாழ்க்கை வாழலாம் என்று வேல்முருகன் ஆசை வார்த்தை கூறியுள்ளார்.
பணத்திற்கு ஆசைப்பட்டு தம்பிதுரையும் மரங்களை கடத்துவதற்கு ஒப்புக் கொண்டார். நேற்றிரவு பணி நேரம் முடிந்தவுடன், உயர் அதிகாரிகளுக்கு தெரியாமல் போலீஸ் வேனை 2 பேரும் ஏலகிரிக்கு ஓட்டி வந்தனர். போலீஸ் வேனில் மரங்களை கடத்தினால் யாருக்கும் சந்தேகம் வராது.
வழியில் வனத்துறையினரோ? அல்லது போலீசாரோ? மடக்கி சோதனை செய்ய மாட்டார்கள் என்று நினைத்தனர்.
மரங்களை கடத்துவது போலீஸ்காரர்கள் என்பதால் 10-க்கும் மேற்பட்டோர் கூட்டு சேர்ந்தனர். சந்தன மரங்களை கடத்த முயன்றனர். ஆனால் இவர்கள் கண்ணில் தேக்கு மரங்கள் மட்டுமே தென்பட்டன. இதையடுத்து கட்டர், கத்தி உள்ளிட்ட ஆயுதங்களை கொண்டு தேக்கு மரங்களை வெட்டி சாய்த்தனர்.
சுமார் 2 டன் எடையுள்ள தேக்கு மரங்களை 40 துண்டுகளாக வெட்டி போலீஸ் வேனில் அடுக்கி கடத்துவதற்கு தயாராகி கொண்டிருந்தபோது, வனத்துறையினரிடம் சிக்கி கொண்டது தெரியவந்தது.
இதையடுத்து, போலீஸ்காரர்கள் வேல்முருகன் மற்றும் தம்பிதுரையை வனத்துறையினர் கைது செய்தனர். அவர்கள் பயன்படுத்திய போலீஸ் வேனும், 2 டன் தேக்கு மரங்களுடன் பறிமுதல் செய்யப்பட்டது.
மேலும், தப்பி ஓடிய கும்பல் ஏலகிரியை சேர்ந்த கைது செய்யப்பட்ட போலீஸ்காரர் வேல்முருகனின் உறவினர்களா? அல்லது ஆயுதப்படையை சேர்ந்த போலீசாரா? என்பது குறித்தும் தீவிர விசாரணை நடத்தினர்.
இதையடுத்து, 2 பேரையும் குடியாத்தம் சப்-கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர். இந்த சம்பவம் ஏலகிரியில் பரபரப்பை ஏற்படுத்தியது.