செய்திகள்

சிவன் கோவிலில் கொள்ளைபோன ரூ.2 கோடி மதிப்புள்ள மரகதலிங்கம் மீட்பு: 2 பேர் கைது

Published On 2017-07-03 12:26 IST   |   Update On 2017-07-03 12:26:00 IST
திருப்போரூர் சிவன் கோவிலில் இருந்த மரகத லிங்கம் கொள்ளை போனது தொடர்பாக 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
திருப்போரூர்:

திருப்போரூரை அடுத்த இள்ளலூரில் பழமை வாய்ந்த சுயம்பீஸ்வரர் கோவில் உள்ளது. கடந்த 24-ந் தேதி கோவிலில் இருந்த சுமார் ஒரு அடி உயரமுள்ள மரகத லிங்கத்தை மர்ம கும்பல் கொள்ளையடித்து சென்றுவிட்டனர். இதன் மதிப்பு ரூ. 2 கோடி ஆகும்.

இது குறித்து திருப்போரூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

இந்த நிலையில் மரகத லிங்கத்தை கொள்ளையடித்த மன்னார்குடியை சேர்ந்த அருள், உத்தண்டியை சேர்ந்த ரமேஷ் ஆகிய 2 பேரை கைது செய்தனர். அவர்களை மன்னார்குடியில் தனிப்படை போலீசார் மடக்கி பிடித்தனர். அவர்களிடம் இருந்து மரகதலிங்கம் மீட்கப்பட்டது.

இந்த கொள்ளையில் மேலும் 3 பேருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது. அவர்கள் குறித்து விசாரித்து வருகிறார்கள்.

மரகத லிங்கம் கொள்ளையடிக்கப்படுவதற்கு முன்பு அதே கோவிலில் கொள்ளை முயற்சி நடந்தது. அப்போது சத்தம் கேட்டு பொது மக்கள் திரண்டதால் மர்ம நபர்கள் ஒரு மோட்டார் சைக்கிளை விட்டு தப்பி ஓடி விட்டனர்.

இந்த மோட்டார் சைக்கிளை துருப்பு சீட்டாக வைத்து போலீசார் துப்பு துலக்கினர். மேலும் கொள்ளை நடந்த நாளில் அங்குள்ள செல்போன் டவரில் பதிவான அழைப்புகளையும் ஆய்வு செய்தனர். இதனை வைத்து குற்றவாளிகளை நெருங்கியதாக போலீஸ்காரர் ஒருவர் தெரிவித்தார்.

Similar News