செய்திகள்

டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி தூக்கில் தொங்கியபடி போராட்டம் நடத்திய பொதுமக்கள்

Published On 2017-05-28 15:03 GMT   |   Update On 2017-05-28 15:03 GMT
காரைக்குடி அருகே டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி பொதுமக்கள் தூக்கில் தொங்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

காரைக்குடி:

சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுப்படி தமிழகத்தில் நெடுஞ்சாலை ஓரத்தில் இருந்த 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டன.

மூடப்பட்ட கடைகளுக்கு பதில் கிராமப்புறங்களில் கடைகள் திறக்க டாஸ்மாக் நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்கு பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

சிவகங்கை மாவட்டத்தில் தேவகோட்டை, காரைக்குடி, திருப்பத்தூர் மானாமதுரை உள்ளிட்ட பகுதிகளில் டாஸ்மாக் கடைகளுக்கு எதிராக போராட்டம் நடந்து வருகிறது.

இந்த நிலையில் காரைக்குடி அருகே மித்ரா வயலில் டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி அப்பகுதி பொதுமக்கள், பெண்கள், இந்திய கம்யூனிஸ்டு கட்சி மற்றும் மாதர் சங்கத்தினர் கடந்த 20-ந் தேதி கடையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

இதைத் தொடர்ந்து தாசில்தார் மற்றும் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி கடை மூடப்படும் என்று உறுதி அளித்தனர். ஆனால் கடையை அகற்ற எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

கடந்த 8 நாட்களாக நடந்த போராட்டத்தை அதிகாரிகள் கண்டு கொள்ளவே இல்லை. இந்த நிலையில் நேற்று மித்ராவயலில் 9-வது நாளாக போராட்டம் நடந்தது.

பொதுமக்கள் தூக்கு கயிறை கட்டி அதில் தொங்கியவாறு பாவனை செய்து போராட்டம் நடத்தினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

10-வது நாளான இன்று (28-ந்தேதி) குடிகார கணவனால் மனைவி, குழந்தைகள் எவ்வாறு துன்புறுத்தலுக்கு ஆளாகிறார்கள்? என்பதை பொதுமக்கள் நடித்துக் காட்டியபடி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Tags:    

Similar News