செய்திகள்

கயத்தாறு அருகே பாலத்தில் கார் மோதி விபத்து: தந்தை-மகன் உள்பட 4 பேர் பலி

Published On 2017-05-27 10:43 IST   |   Update On 2017-05-27 13:18:00 IST
கயத்தாறு அருகே பாலத்தில் கார் எதிர்பாராதவிதமாக மோதிய விபத்தில் தந்தை-மகன் உள்பட 4 பேர் பலியாகினர். இந்த விபத்து காரணமாக அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
கயத்தார்:

சென்னை மடிப்பாக்கத்தை சேர்ந்தவர் அஜய். இவரது மகன் நிதின். இவர்கள் இருவரும் தங்களது நண்பர் ஒருவருடன் நேற்று நெல்லையில் உள்ள சாய்பாபா கோவிலுக்கு காரில் புறப்பட்டு வந்தனர். காரை டிரைவர் சத்தியநாராயணன் ஓட்டி வந்தார். அவர்களது கார் இன்று அதிகாலை தூத்துக்குடி மாவட்டம் கயத்தார் அருகே வந்து கொண்டிருந்தது. கயத்தார் நான்கு வழிச்சாலையில் தளவாய்புரம் என்ற இடத்தில் குறுகிய பாலம் உள்ளது. அந்த இடத்தில் வந்தபோது கார் எதிர்பாராதவிதமாக பாலத்தில் மோதியது. இதில் காரின் முன்பகுதி நொறுங்கியது. இதில் காரில் இருந்த அஜய், நிதின் உள்பட 3 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியானார்கள்.

டிரைவர் சத்யநாராயணன் பலத்த காயத்துடன் உயிருக்கு போராடிக்கொண்டிருந்தார். உடனே அவரை அவ்வழியாக வந்தவர்கள் மீட்டு கோவில்பட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார்.

இந்த விபத்து காரணமாக அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. சம்பவ இடத்துக்கு கயத்தார் போலீசார் விரைந்து வந்து 3 பேரின் பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர். போக்குவரத்தையும் சரிசெய்தனர்.

ஏற்கனவே இந்த இடத்தில் பல விபத்துகள் நடந்துள்ளன. குறுகிய பாலத்தை அகற்றி பெரிய பாலமாக அமைக்கவேண்டும் என பல்வேறு அமைப்புகள் கோரிக்கை விடுத்தும் நெடுஞ்சாலைதுறை கண்டுகொள்ளவில்லை. இனியாவது இதை சரிசெய்து விபத்துகள் ஏற்படாத வகையில் தடுக்கவேண்டும் என்கின்றனர் பொதுமக்கள்.

Similar News