செய்திகள்

வறட்சியால் ஏரி வறண்டது: வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம் 31-ந் தேதி மூடப்படுகிறது

Published On 2017-05-25 07:04 GMT   |   Update On 2017-05-25 07:05 GMT
வறட்சி மற்றும் மழை இன்மை காரணமாக வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம் இந்த மாதம் 31-ந் தேதி மூடப்படும் என்று வனத்துறையினர் அறிவித்து உள்ளனர்.
காஞ்சீபுரம்:

வேடந்தாங்கல் பகுதியில் அமைந்துள்ள பறவைகள் சரணாலயம் உலக புகழ் பெற்றது. ஆண்டுதோறும் இங்கு இலங்கை, பாகிஸ்தான், கனடா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் இருந்து வர்ணநாரை, செந்நாரை, அரிவாள்மூக்கன் உள்ளிட்ட அரியவகை பறவைகள் ஆண்டுதோறும் வந்து முட்டைஇட்டு இனப் பெருக்கத்தில் ஈடுபடும்.

இந்த சரணாலத்திற்கு சுமார் 40 ஆயிரத்திற்கும் அதிகமான பறவைகள் வந்து செல்லும். வழக்கமாக நவம்பர் மாதம் முதல் ஜூலை இறுதிவரை திறந்திருக்கும் சரணாலத்திற்கு சுற்றுலா பயணிகள் மற்றும் பல்வேறு மாநிலங்களில் இருந்து ஏராளமானோர் ஆர்வமுடன் வருவார்கள். பெரிய ஏரியில் உள்ள மரங்களில் பறவைகள் தங்கி இருக்கும் அழகை அவர்களை ரசித்து செல்வார்கள்.

இந்த நிலையில் பருவ மழை பொய்த்து போனதாலும் கடும் வெப்பம் நிலவுவதாலும் இங்குள்ள ஏரி முழுமையாக வறண்டு விட்டது.

இதனால் சரணாலயத்துக்கு பறவைகள் ஏதும் தற்போது வருவது இல்லை. வழக்கமாக ஜூலை மாத இறுதியில் மூடப்படும். தற்போது வறட்சி மற்றும் மழை இன்மை காரணமாக இரண்டு மாதத்திற்கு முன்பாகவே இந்த மாதம் 31-ந் தேதி சரணாலயம் மூடப்படும் என்று வனத்துறையினர் அறிவித்து உள்ளனர்.
Tags:    

Similar News