செய்திகள்

ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக நெடுவாசலில் 42-வது நாளாக போராட்டம்

Published On 2017-05-23 07:25 GMT   |   Update On 2017-05-23 07:25 GMT
ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக நெடுவாசலில் 42-வது நாளாக பொதுமக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். ஒவ்வொரு நாளும் மத்திய அரசை கண்டித்து பல்வேறு நூதன போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
புதுக்கோட்டை:

புதுக்கோட்டை மாவட்டம், நெடுவாசல் உள்பட நாடு முழுவதிலும் 31 இடங்களில் ஹைட்ரோ கார்பன் என்னும் இயற்கை எரிவாயு எடுக்க தனியார் நிறுவனங்களுக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியது.

இதை கண்டித்து, நெடுவாசலில் அப்பகுதி மக்கள் கடந்த மாதம் 12-ந்தேதி முதல் இரண்டாம் கட்ட போராட்டத்தை தொடங்கி நடத்தி வருகிறார்கள். ஒவ்வொரு நாளும் மத்திய அரசை கண்டித்து பல்வேறு நூதன போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

41-வது நாளாக நேற்று நடந்த போராட்டத்தில் கலந்து கொண்ட பொதுமக்கள், சிறுவர்கள், பெண்கள், ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிரான வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியவாறு, ஹைட்ரோகார்பன் திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தியும், திட்டத்துக்கு அனுமதி வழங்கிய மத்திய அரசை கண்டித்தும் கோ‌ஷங்கள் எழுப்பினர்.

இந்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து கூடங்குளம் அணு உலை எதிர்ப்பாளர் உதயகுமார் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:-

தங்கள் வாழ்வாதாரமான விவசாயத்தையும், அவர்களது மண்ணை காக்கவும் நெடுவாசல் பகுதி மக்கள் பல நாட்களாக போராடி வருகின்றனர். ஆனால் இந்த மக்களை மத்திய, மாநில அரசுகள் கண்டு கொள்ளவே இல்லை. மக்களின் வாழ்வுரிமை முக்கியமா? தனி முதலாளிகளின் வருவாய் முக்கியமா? என்ற கேள்விக்கு மத்திய, மாநில அரசுகள் பதில் சொல்ல வேண்டும்.

ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டம் நெடுவாசலை மட்டும் பாதிக்கும் திட்டம் அல்ல, என்பதால் தமிழக மக்கள் ஒட்டுமொத்தமாக திட்டத்தை எதிர்த்து வருகின்றனர். அதனால் இந்த திட்டத்தை உடனே ரத்து செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

இன்று 42-வது நாளாக போராட்டம் நடைபெற்று வருகிறது. ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கைவிட்டால் மட் டுமே நாங்கள் எங்களது தொடர் போராட்டத்தை விலக்கிக்கொள்வோம் என நெடுவாசல் மற்றும் அதனை சுற்றியுள்ள போராட்டத்தில் பங்கேற்றவர்கள் தெரிவித்தனர்.
Tags:    

Similar News