செய்திகள் (Tamil News)

புதுக்கோட்டை அருகே குளத்தின் கரையில் துண்டு துண்டாக கிடந்த பழைய 500, 1000 ரூபாய் நோட்டுக்கள்

Published On 2017-05-21 14:57 GMT   |   Update On 2017-05-21 14:57 GMT
புதுக்கோட்டை அருகே குளத்தின் கரையில் பழைய ரூ.500, 1000 ரூபாய் நோட்டுக்கள் துண்டு துண்டாக வெட்டி வீசப்பட்டு கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

புதுக்கோட்டை:

பழைய ரூ.500, 1000 ரூபாய் நோட்டுகளுக்கு தடை விதிக்கப்பட்டு, புதிதாக ரூ.2 ஆயிரம் மற்றும் ரூ.500 நோட்டுக்கள் புழக்கத்தில் விடப்பட்டுள்ளது. மேலும் பழைய 500 , 1000 ரூபாய் நோட்டுக்களை வைத்திருப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்பதால் அதனை வைத்திருப்பவர்கள் ஆங்காங்கே வீசி வருகின்றனர். அதனை போலீசார் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே கோவிலூர் குளத்துக்கரையில் கடந்த 2 நாட்களாக ஒரு சாக்குமூடை ஒன்று கிடந்தது. அதனை பொதுமக்கள் யாரும் பிரித்து பார்க்காமல் சென்று வந்தனர். இன்று காலை அந்த வழியாக சென்ற நபர், சாக்கு மூட்டையை பிரித்து பார்த்த போது அதற்குள் ரூபாய் நோட்டுக்கள் துண்டு துண்டாக வெட்டி கிடந்தன. அதிர்ச்சியடைந்த அவர் இதுகுறித்து ஆலங்குடி போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.

போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சாக்கு மூட்டையை கைப்பற்றி சோதனையிட்டனர். அப்போது அதற்குள் பழைய ரூபாய் நோட்டுக்கள் 500, 1000 ஆகியவை துண்டு துண்டாக வெட்டி கிடந்தன. மேலும் ரூ.100, 50 நோட்டுக்களும் சிறிது சிறிதாக துண்டிக்கப்பட்டு கிடந்தன. துண்டு துண்டாக வெட்டப்பட்ட பணத்தின் மதிப்பு ரூ.1லட்சத்திற்கும் மேல் இருக்கும் என்று தெரிகிறது.

அதனை வெட்டி வீசிய மர்மநபர்கள் யார்? என்று தெரியவில்லை. பழைய ரூபாய் நோட்டுக்களை வைத்திருந்ததால் போலீசாரிடம் சிக்கி விடுவோமோ? என்று பயந்து அதனை துண்டு துண்டாக வெட்டி வீசினரா? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். செல்லக்கூடிய ரூபாய் நோட்டுக்கள் 100, 50 கிடந்ததால் அவை கள்ள நோட்டுக்களாக இருக்கலாமா? என்றும் பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னையில் பா.ஜனதா பிரமுகர் வீட்டில் ரூ.45 கோடி மதிப்பில் பழைய ரூபாய் நோட்டுக்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

இந்நிலையில் ஆலங்குடியில் பழைய ரூபாய் நோட்டுக்கள் துண்டு துண்டாக வெட்டி வீசப்பட்டு கிடந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News