செய்திகள்

கடலூர் அருகே கார்-பஸ் நேருக்கு நேர் மோதி விபத்து: சென்னை மணமகனின் பெற்றோர் பலி

Published On 2017-05-08 09:45 IST   |   Update On 2017-05-08 09:45:00 IST
கடலூர் அருகே கார்-பஸ் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் சென்னை மணமகனின் பெற்றோர் பலியாயினர். திருமணம் முடிந்து மணமக்களை கோவிலுக்கு அழைத்துச் சென்றபோது இந்த பரிதாப சம்பவம் நிகழ்ந்து உள்ளது.
கடலூர்:

கடலூர் மஞ்சக்குப்பம் சுப்பிரமணியன் நகரை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன்(வயது 60). முன்னாள் ராணுவ வீரர். இவருடைய மனைவி புவனேஸ்வரி(55). இவர்களது மகன் சிவராமன்(27). இவர் சென்னையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்.

சிவராமனுக்கும், கடலூர் திருப்பாதிரிப்புலியூரை சேர்ந்தவரும், கடலூர் மாவட்ட முன்னாள் தீயணைப்புத்துறை அதிகாரியுமான குமாரசாமி மகள் சொர்ணலதா(25) என்பவருக்கும் திருமணம் செய்து வைக்க இருவீட்டு பெற்றோர் மற்றும் உறவினர்கள் முடிவு செய்தனர்.

அதன்படி சிவராமனுக்கும், சொர்ணலதாவிற்கும் நேற்று காலை திருப்பாதிரிப்புலியூரில் உள்ள ஒரு மண்டபத்தில் திருமணம் நடைபெற்றது. பின்னர் மதியம் 1 மணி அளவில் பாலசுப்பிரமணியனும், புவனேஸ்வரியும் மணமக்களுடன் சாமி கும்பிடுவதற்காக மயிலம் முருகன் கோவிலுக்கு காரில் புறப்பட்டனர். காரை பாலசுப்பிரமணியன் ஓட்டினார்.

கடலூர்-புதுச்சேரி சாலையில் பெரியகாட்டுப்பாளையம் என்ற இடத்தில் சென்றபோது காரும், புதுச்சேரியில் இருந்து கடலூர் நோக்கி வந்த தனியார் சுற்றுலா பஸ்சும் கண் இமைக்கும் நேரத்தில் நேருக்கு நேர் மோதிக்கொண்டன.

இந்த விபத்தில் கார் அப்பளம்போல நொறுங்கியது. பஸ்சின் முன்பகுதியும் பலத்த சேதமடைந்தது. இதில் மணமகனின் தந்தை பாலசுப்பிரமணியன் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பலியானார். மணமகனின் தாயார் புவனேஸ்வரி, மணமக்கள் சிவராமன்-சொர்ணலதா ஆகிய 3 பேரும் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடினர்.

இந்த விபத்து காரணமாக மோதிக் கொண்ட இரு வாகனங்களும் நடுரோட்டில் நின்றன. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுபற்றிய தகவலின் பேரில் ரெட்டிச்சாவடி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பாலசுப்பிரமணியனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

காரின் இடிபாடுகளுக்குள் சிக்கித்தவித்த புவனேஸ்வரி, சிவராமன், சொர்ணலதா ஆகிய 3 பேரையும் போலீசார் பொதுமக்கள் உதவியுடன் மீட்டு சிகிச்சைக்காக புதுச்சேரியில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி புவனேஸ்வரி பரிதாபமாக இறந்தார். மேலும் மணமக்கள் சிவராமன், சொர்ணலதா ஆகிய இருவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதனை தொடர்ந்து விபத்தில் சிக்கிய காரையும், பஸ்சையும் கிரேன் மூலம் போலீசார் அப்புறப்படுத்தினர். இதையடுத்து கடலூர்-புதுச்சேரி சாலையில் போக்குவரத்து சீரானது. விபத்து குறித்த புகாரின் பேரில் ரெட்டிச்சாவடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருமணம் முடிந்ததும் மணமக்களை கோவிலுக்கு அழைத்துச் சென்றபோது நிகழ்ந்த விபத்தில் மணமகனின் பெற்றோர் பலியான சம்பவம் உறவினர்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Similar News