செய்திகள்

தமிழகத்தில் செல்வாக்குள்ள தலைவர்கள் யாருமில்லை: ஏ.சி.சண்முகம் பேட்டி

Published On 2017-05-01 12:18 IST   |   Update On 2017-05-01 12:18:00 IST
தமிழகத்தில் செல்வாக்கு உள்ள தலைவர்கள் யாரும் இல்லை. இதனால் தமிழகத்தில் பா.ஜனதா கட்சி காலூன்ற தயாராக உள்ளது என்று ஏ.சி. சண்முகம் பேட்டியில் கூறினார்.

ஆரணி:

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் புதிய நீதிக்கட்சி நிறுவனத் தலைவர் ஏ.சி.சண்முகம் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தமிழகத்தில் அ.தி.மு.க. இரு அணிகளும் விரைவில் இணைந்து நாட்டு மக்களுக்கு உழைக்க வேண்டும். இரு அணிகளும் பலப்பரீட்சை பார்க்கக்கூடாது.

நான் அ.தி.மு.க. தொடங்கிய காலத்தில் இருந்து வந்தவன். சென்னை மாவட்ட செயலாளராகவும், ஆரணி நகர செயலாளராகவும் இருந்தவன்.

இந்தியாவில் உள்ள பல நதிகளை இணைத்து தேசிய நதிநீர் திட்டம் கொண்டு வர வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்துகிறோம். அதேபோல் தமிழகத்தில் ஆற்றுப்படுகையில் தடுப்பணைகளை தமிழக அரசு அமைக்க வேண்டும். ஆந்திரா, கர்நாடகா, கேரளா ஆகிய அண்டை மாநிலங்களில் உருவாகி தமிழகத்துக்குள் நுழையும் ஆறுகளில், அந்தந்த மாநில அரசுகள் தமிழக எல்லையையொட்டி ஆற்றின் குறுக்கே அணைகளை கட்டுகின்றன.

அதேபோல் நாமும் ஏன் ஆற்றுப்படுகைகளில் அணைகளை கட்டக்கூடாது என்று தான் கேட்கிறோம். ஆற்றுப்படுகையிலும், நீலகிரி மாவட்டம் ஊட்டி பகுதியில் அதிகமாக மழை பெய்கிறது. அங்கு, தண்ணீரை சேமித்து வைக்க தமிழக அரசு ஏன் அணைகள் கட்டக்கூடாது. டெல்லியில் போராட்டம் நடத்திய விவசாயிகளை வாழ்த்துகிறோம்.

சட்டமன்றத்துக்கு தற்போது தேர்தல் வர வாய்ப்பில்லை. தமிழகத்தில் செல்வாக்கு உள்ள தலைவர்கள் யாரும் இல்லை. இதனால், தமிழகத்தில் பா.ஜனதா கட்சி காலூன்ற தயாராக உள்ளது. புதிய நீதிக்கட்சி, பா.ஜனதா கட்சி கூட்டணி தொடர்கிறது.

மத்திய அரசு நீட் தேர்வை ரத்து செய்யவில்லை என்றால் இந்தியா முழுவதும் கிராமப்புற மாணவர்களால் டாக்டர்களாக ஆக முடியாது. தமிழகத்தில் ஓட்டுச்சீட்டு முறையை அமல்படுத்த வேண்டும். இன்னும் வளர்ந்த மேலைநாடுகளில் ஓட்டுச்சீட்டு முறைதான் உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

Similar News