செய்திகள்

கடலூரில் கழுத்தை நெரித்து பெண் கொலை: கைதான வாலிபர் வாக்குமூலம்

Published On 2017-04-24 10:51 GMT   |   Update On 2017-04-24 10:51 GMT
என்னையும் எனது மனைவி, குழந்தை பற்றி ஆபாசமாக திட்டியதால் பெண்ணை கழுத்தை நெரித்து கொலை செய்தேன் என்று போலீசாரிடம் வாலிபர் வாக்குமூலம் தெரிவித்துள்ளார்.

கடலூர்:

கடலூர் முதுநகர் அருகே உள்ள நொச்சிக்காடு கிராமத்தை சேர்ந்தவர் ராஜலட்சுமி (வயது 75). இவர் கடந்த 21-ந் தேதி காலை வீட்டில் கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தார். அவரது கை-கால்கள் கட்டப்பட்டு இருந்தது. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

அதில் ராஜலட்சுமியை நொச்சிக்காடு வள்ளலார் நகரை சேர்ந்த அருண்ராஜ் (30) கொலை செய்தது தெரியவந்தது.

இதையடுத்து அருண்ராஜை போலீசார் கைது செய்தனர். ராஜலட்சுமியை கொலை செய்தது ஏன்? என்று போலீசாரிடம் அருண்ராஜ் அளித்த வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது:-

கடந்த 2013-ம் ஆண்டு ராஜலட்சுமி வீட்டில் நானும், எனது நண்பரும் புகுந்து அவரை தாக்கி நகை மற்றும் பணத்தை திருடிச்சென்றோம். அப்போது என்னையும், எனது நண்பரையும் அவர் அடையாளம் கண்டு விட்டார். இதுதொடர்பாக அவர் கொடுத்த புகாரின் பேரில் துறைமுகம் போலீசார், எங்களை கைது செய்தனர். அன்றைய தினம் முதல் ராஜலட்சுமி என்னை திட்டிக்கொண்டே இருந்தார்.

கடந்த 1½ ஆண்டுகளுக்கு முன்பு எனக்கு திருமணம் நடந்தது. தற்போது எனக்கு 5 மாதத்தில் ஒரு மகன் உள்ளான். கடந்த 20-ந் தேதி மாலை 4.30 மணிக்கு ராஜலட்சுமியின் வீடு வழியாக நான் நடந்து சென்றேன். அப்போது ராஜலட்சுமி, என்னையும் எனது மனைவி, குழந்தை மற்றும் எனது குடும்பத்தை பற்றி ஆபாசமாக திட்டி, சாபமிட்டார். இதனால் எனக்கு ஆத்திரம் ஏற்பட்டது. உடனடியாக நான், டாஸ்மாக் கடைக்கு சென்று மது குடித்தேன். ராஜலட்சுமியை கொலை செய்ய திட்டமிட்டேன்.

இரவு 11 மணிக்கு போதையில் ராஜலட்சுமியின் வீட்டுக்கு சென்றேன். அங்கு தூங்கிக்கொண்டிருந்த ராஜலட்சுமியின் வாயை பொத்தி அவரை கழுத்தை நெரித்து கொலை செய்தேன். பின்னர் தடயங்களை அழிப்பதற்காகவும், மோப்ப நாயிடம் சிக்காமல் இருப்பதற்காகவும் ராஜலட்சுமியின் உடலை சுற்றியும், வீட்டிலும் மிளகாய் பொடியை தூவி விடு தப்பி ஓடிவிட்டேன்.

இவ்வாறு அவர் தனது வாக்குமூலத்தில் கூறியுள்ளார்.

Similar News