செய்திகள்

விருத்தாசலம் அருகே சொகுசு பஸ் மாட்டுவண்டி மீது மோதி வயலில் கவிழ்ந்தது: 23 பேர் படுகாயம்

Published On 2017-04-22 12:28 GMT   |   Update On 2017-04-22 12:28 GMT
விருத்தாசலம் அருகே இன்று காலை சொகுசு பஸ் மாட்டுவண்டி மீது மோதி சாலையோரம் உள்ள வயலில் கவிழ்ந்தது. இதில் 23 பேர் படுகாயம் அடைந்தனர்.

விருத்தாசலம்:

பொள்ளாச்சியில் இருந்து புதுவைக்கு 20 பயணிகளை ஏற்றிக்கொண்டு சொகுசு பஸ் ஒன்று புறப்பட்டது. பஸ்சை கோவை சீலமேட்டுபகுதியை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி ஓட்டி வந்தார். கண்டக்டராக சேலம் வாழப்பாடி சோமம்பட்டியை சேர்ந்த மாரிப்பன் இருந்து வந்தார்.

இன்று காலை அந்த பஸ் விருத்தாசலம் மணிமுத்தாற்று பாலம் அருகே வந்தபோது முன்னால் சென்ற மாட்டுவண்டி மீது மோதியது. இதனால் பஸ் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி சாலையோரம் உள்ள வயலில் கவிழ்ந்தது.

உள்ளே இருந்த பயணிகள் கூச்சலிட்டனர். இந்த விபத்தில் ஒரு மாடு பலத்த காயம் அடைந்தது. மேலும் மாட்டு வண்டியை ஓட்டிவந்த விருத்தாசலம் பூதமூரை சேர்ந்த கலியபெருமாள் (வயது 61) என்பவர் படுகாயம் அடைந்தார்.

மேலும் பஸ்சில் இருந்த டிரைவர் கிருஷ்ணமூர்த்தி, கண்டக்டர் மாரியப்பன் மற்றும் பயணிகள் 20 பேரும் காயம் அடைந்தனர். இந்த விபத்து குறித்து தகவல் அறிந்ததும் விருத்தாசலம் போலீசார் விரைந்து சென்று காயம் அடைந்த 23 பேரையும் மீட்டு விருத்தாசலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Similar News