பெருந்துறை அருகே காதலி கண்முன்னே விஷம் குடித்து வாலிபர் தற்கொலை
பெருந்துறை:
கோபி அருகே உள்ள பொயகொடிவோ தேம்பில் காலனி என்ற இடத்தை சேர்ந்தவர் சுயம்பு. இவரது மகன் பபின் (வயது 21). இவர் சத்தியமங்கலத்தில் உள்ள ஒரு கூரியர் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார்.
இவர் திருப்பூர் பனியன் கம்பெனிக்கு வேலைக்கு செல்லும் ஒரு பெண்ணை கடந்த சில மாதங்களாக காதலித்து வந்தார்.
இந்தநிலையில் அந்த பெண்ணுக்கு அவரது பெற் றோர் மாப்பிள்ளை பார்த்து திருமணம் செய்ய முடிவு செய்யப்பட்டது. இதனால் நிச்சயதார்த்தமும் நடந்து விட்டது.
இதுபற்றி தகவல் கிடைத்ததும் பபின் அதிர்ச்சி அடைந்தார். இதுபற்றி தனது காதலியிடம் அவர் போனில் கேட்டார். அதற்கு அந்த பெண் நான் நேரில் வந்து இதுபற்றி பேசுகிறேன் என்று கூறினாராம்.
இதைதொடர்ந்து பபினின் காதலி பெருந்துறை அருகே உள்ள மடத்துப் பாளையத்துக்கு வந்தார். அங்கு ஒதுக்குப்புறமான இடத்தில் உள்ள ரோட்டில் பபினும், அந்த பெண்ணும் சந்தித்து பேசினர்.
அப்போது அந்த பெண் தனக்கு வேறுஇடத்தில் திருமணம் நடக்க போவதாகவும் எனவே, நீங்கள் என்னை சந்தித்து பேசவேண்டாம். நீங்களும் என்னை மறந்து வேறுஇடத்தில் பெண் பார்த்து திருமணம் செய்து கொள்ளுங்கள் என்று கூறியதாக தெரிகிறது.
இதனால் மனம் உடைந்த நிலையில் இருந்த பபின் உன்னை பிரிந்து என்னால் வாழ முடியாது என்று கூறி, தான் தயாராக வைத்திருந்த விஷத்தை தனது காதலி முன்னே குடித்து விட்டார்.
உடனே பபின் பெருந்துறை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். பிறகு மேல் சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்ட அவர் அங்கு சிகிச்சை பலன் இல்லாமல் பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து பெருந்துறை போலீஸ் சப் -இன்ஸ்பெக்டர் அர்ஜுணன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.