செய்திகள்

ரூ.12 ஆயிரம் லஞ்சம் வாங்கிய மின் ஆய்வாளர் கைது: லஞ்ச ஒழிப்பு போலீசார் நடவடிக்கை

Published On 2017-04-12 02:06 GMT   |   Update On 2017-04-12 02:06 GMT
பொருட்காட்சி நடத்துவதற்கு தடையில்லா சான்றிதழ் வழங்க ரூ.12 ஆயிரம் லஞ்சம் வாங்கியதாக விருதுநகர் மின் ஆய்வாளர் லஞ்ச ஒழிப்பு போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
விருதுநகர்:

விருதுநகர் சூலக்கரையில் மாவட்ட மின் ஆய்வாளர் அலுவலகம் உள்ளது. இங்கு மதுரையை சேர்ந்த சதீஷ்குமார் (வயது 38) என்பவர் மின் ஆய்வாளராக பணியாற்றி வருகிறார். மாவட்டத்தில் உள்ள அனைத்து பகுதிகளுக்கும் தற்காலிக மின் இணைப்பு கொடுப்பதற்கான தடையில்லா சான்றிதழ் இந்த அலுவலகத்தில் தான் பெற வேண்டும். விருதுநகர் பாண்டியன் நகரை சேர்ந்த மாரித்துரை (31) என்பவர் செட்டியார்பட்டி கிராமத்தில் பொருட்காட்சி நடத்துவதற்காக தடையில்லா சான்றிதழ் கேட்டு மின் ஆய்வாளர் சதீஷ்குமாரிடம் விண்ணப்பம் கொடுத்தார்.

சதீஷ்குமார் தடையில்லா சான்றிதழ் வழங்காமல் தாமதப்படுத்தியதாக கூறப்படுகிறது. மாரித்துரை தடையில்லா சான்றிதழ் உடனடியாக வேண்டி உள்ளதால் தாமதம் இல்லாமல் வழங்குமாறு மின் ஆய்வாளர் சதீஷ்குமாரிடம் கேட்ட போது, அவர் சான்றிதழ் வழங்க ரூ.12 ஆயிரம் லஞ்சம் தர வேண்டும் என்று வற்புறுத்தினார். இதனால் அதிர்ச்சி அடைந்த மாரித்துரை இது பற்றி விருதுநகர் மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் புகார் செய்தார்.

லஞ்ச ஒழிப்பு போலீசாரின் அறிவுறுத்தலின்படி நேற்று மாரித்துரை மின் ஆய்வாளர் சதீஷ்குமாரின் அலுவலகத்துக்கு சென்று அவர் கேட்ட ரூ.12 ஆயிரம் லஞ்ச பணத்தை அவரிடம் கொடுத்தார். அப்போது அங்கு மறைந்து இருந்த லஞ்ச ஒழிப்பு இன்ஸ்பெக்டர் விஜயகாண்டீபன் மற்றும் போலீசார் மின் ஆய்வாளர் சதீஷ்குமாரை அதிரடியாக பிடித்து லஞ்ச பணத்தை பறிமுதல் செய்ததுடன் அவரை கைது செய்து வழக்குபதிவு செய்தனர். இது குறித்து மேல் விசாரணை நடைபெறுகிறது.

Similar News