செய்திகள்

கோபி நகராட்சி நினைவு தூண் லாரி மோதி இடிந்தது: டிரைவர் நசுங்கி பலி

Published On 2017-03-22 11:41 GMT   |   Update On 2017-03-22 11:41 GMT
கோபி நகராட்சி நினைவு தூண் மீது லாரி மோதிய விபத்தில் டிரைவர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பலியானார். விபத்து தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கோபி:

அரியலூர் மாவட்டம் கருவேலங்காட்டைச் சேர்ந்தவர் மணி. இவரது மகன்குமார் (வயது 21) லாரி டிரைவர்.

நேற்று இவர் அரியலூரில் இருந்து ஈரோடு மாவட்டம் தாளவாடிக்கு சிமெண்டு லோடு ஏற்றிக்கொண்டு வந்து கொண்டிருந்தார்.

ஈரோட்டை தாண்டி கோபியை நோக்கி இன்று (புதன்கிழமை) அதிகாலை 4.30 மணியளவில் அந்த லாரி சென்று கொண்டிருந்தது.

அப்போது நகர எல்லையில் கோபி நகராட்சி ஸ்தூபி (வளைவில்) அந்த லாரி எதிர்பாராதவிதமாக மோதியது. இதில் அந்த ஸ்தூபி இடிந்து தூள்... தூள் ஆனது.

கடந்த 01.12.1958-ல் கோபியில் தமிழ்நாடு அரசியல் மாநாடு நடந்தது. அதன் நினைவாக இந்த ஸ்தூபி (வளைவு) கட்டப்பட்டது. இதனை அப்போதைய முதல்- அமைச்சர் காமராஜர் திறந்துவைத்தார். அந்த ஸ்தூபி முற்றிலும் இடிந்து விழுந்தது.

மேலும் லாரி வேகமாக வந்து மோதியதில் அப்பளம் போல் லாரி நொறுங்கியது. இதில் லாரி டிரைவர் குமார் சீட்டில் உட்கார்ந்த நிலையிலேயே பரிதாபமாக இறந்தார்.


இந்த விபத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. அதிகாலையில் நடந்த இந்த விபத்தால் வேறு எந்த வாகனமும் அந்த நேரத்தில் வரவில்லை.

இதுபற்றி தகவல் கிடைத்ததும் கோபி போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். விபத்தில் பலியான டிரைவர் குமார் உடலை மீட்டு பிரேதபரிசோதனைக்காக கோபி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இதுதொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இடிந்துபோன நகராட்சி ஸ்தூபியை நகராட்சி ஊழியர்கள் அப்புறப்படுத்தினார்கள். காமராஜரால் திறந்து வைக்கப்பட்ட ஸ்தூபி முற்றிலும் இடிந்து விழுந்ததால் கோபி நகர மக்களை இது வருத்தம் அடைய வைத்துள்ளது.

Similar News