செய்திகள்

பணத்துக்காக ஓட்டுகளை விற்பனை செய்யக்கூடாது: விக்கிரமராஜா

Published On 2017-03-21 10:24 IST   |   Update On 2017-03-21 10:24:00 IST
எந்த காரணத்திற்காகவும் பணத்துக்காக ஓட்டை விற்பனை செய்துவிடக்கூடாது என வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில தலைவர் விக்கிரமராஜா பேட்டியளித்துள்ளார்.
ஈரோடு:

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் 34-வது மாநில மாநாடு வருகிற மே மாதம் 5-ந்தேதி விழுப்புரத்தில் நடைபெற உள்ளது.

இந்த மாநாடு தொடர்பான ஆலோசனை கூட்டமும், கனிராவுத்தர்குளம் பெரியசேமூர் அனைத்து வணிகர்கள் சங்க ஆண்டு விழா கூட்டமும் ஈரோடு கனிராவுத்தர்குளம் பகுதியில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

கூட்டத்தில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா கலந்துகொண்டு பேசினார். முன்னதாக அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது கூறியதாவது:-

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநாடு விழுப்புரத்தில் வருகிற மே மாதம் 5-ந்தேதி நடக்கிறது. இந்த மாநாட்டில் 15 லட்சம் வணிகர்கள் கலந்துகொள்வார்கள். ஈரோடு மாவட்டத்தில் இருந்து 15 ஆயிரம் வணிகர்கள் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஜி.எஸ்.டி. எனப்படும் சரக்கு சேவை வரி சட்டத்தை சாதாரண மக்கள் புரிந்து கொள்ளும் வகையில் எளிமைப்படுத்த வேண்டும். அப்படி இல்லையென்றால் சாமானிய வணிகர்கள் பாதிக்கப்படுவார்கள். 5 ஆண்டுகளில் 5 லட்சம் சிறு வணிகர்கள் காணாமல் சென்றுவிடுவார்கள். இதுதொடர்பாக மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட உள்ளது.

கோக்-பெப்சி போன்ற வெளிநாட்டு குளிர்பானங்களின் விற்பனை 70 சதவீதத்திற்கு மேல் குறைந்து உள்ளது. பல ஊர்களில் வெளிநாட்டு குளிர்பானங்கள் இல்லாதநிலை உருவாகி உள்ளது. பொதுமக்களும் வெளிநாட்டு குளிர்பானங்களை தவிர்க்க ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும்.

இடைத்தேர்தலினால் ஆர்.கே.நகர் தொகுதியில் அடைமழை (பணமழை) பெய்கிறது. தமிழக அரசியல் சூழ்நிலை அசாதாரண நிலையில் உள்ளது. குடிநீர் போன்ற அடிப்படை பிரச்சனைகளை பொதுமக்கள் புரிந்துகொண்டு வாக்களிக்க வேண்டும். எந்த காரணத்திற்காகவும் பணத்துக்காக ஓட்டை விற்பனை செய்துவிடக்கூடாது.

இவ்வாறு ஏ.எம்.விக்கிரமராஜா கூறினார்.

Similar News