செய்திகள்

புதுக்கோட்டை அருகே பள்ளி வேன் கவிழ்ந்து 15 குழந்தைகள் காயம்

Published On 2017-03-15 10:06 GMT   |   Update On 2017-03-15 10:06 GMT
புதுக்கோட்டை அருகே பள்ளி மாணவர்களை ஏற் றிச் சென்ற வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 15-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் காயம் அடைந்தனர்.
புதுக்கோட்டை:

புதுக்கோட்டை மாவட் டம், திருக்கட்டளை பகுதியை சேர்ந்த மாணவ, மாணவிகள் பலர் புதுக்கோட்டை பகுதியில் உள்ள பள்ளிகளில் படித்து வருகின்றனர். அவர்கள் தனியார் வேன் மூலம் பள்ளிக்கு செல்வது வழக்கம்.

இந்த நிலையில் இன்று காலை 15-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பள்ளிக்கு வேனில் சென்றனர். வேனை மேட்டுப்பட்டியை சேர்ந்த லட்சுமணன் ஓட்டினார். திருக்கட்டளை மெயின் ரோட்டில் செல்லும் போது எதிரே டிப்பர் லாரி வந்தது.

அதில் மோதாமல் இருக்க டிரைவர் வேனை திருப்பிய போது, நிலை தடுமாறி சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் வேனில் இருந்த மாணவிகள் கிருஷ்ணபிரியா, கோபிகா, காமாட்சி, மாணவர்கள் சரவணன், வெங்கடசேன், அருண் உள்பட 15-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் காயம் அடைந்தனர்.

இது குறித்த தகவல் அறிந்ததும் 108 ஆம்புலன்ஸ் குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். பின்னர் காயமடைந்த மாணவ, மாணவிகளை மீட்டு புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

விபத்து குறித்த தகவல் அறிந்ததும் குழந்தைகளின் பெற்றோர்கள் பள்ளிக்கும், ஆஸ்பத்திரிக்கு பதறியடித்துக்கொண்டு ஓடிவந்தனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்த விபத்து குறித்து கணேஷ் நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News