ஹைட்ரோ கார்பன் திட்டம் வேண்டாம்: உடலில் சேறு பூசி பொதுமக்கள் போராட்டம்
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசல் உள்ளிட்ட பகுதிகளில் ஹைட்ரோ கார்பன் எனும் இயற்கை எரிவாயு எடுக்க கடந்த மாதம் (பிப்ரவரி) 15-ந்தேதி மத்திய அரசு அனுமதி வழங்கியது.
இத்திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நெடுவாசலில் நாடியம்மன் கோவில் முன்பு உள்ள மரத்தடியில் அப்பகுதியினர் கடந்த மாதம் 16-ந் தேதி அறவழி போராட்டத்தை தொடங்கினர்.
கடந்த 9-ந்தேதி போராட்டக்குழுவினருடன் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன், அமைச்சர் விஜயபாஸ்கர் ஆகியோர் பேச்சு வார்த்தை நடத்திய பின் நெடுவாசலில் போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.
இருப்பினும் திட்டத்திற்கு எதிராக நல்லாண்டார்கொல்லையிலும், வடகாட்டிலும் போராட்டம் தொடரும் என அப்பகுதி பொதுமக்கள் அறிவித்தனர். அதேபோல 2 இடங்களிலும் தொடர்ந்து போராட்டம் நீடித்து வரும் நிலையில், ஒவ்வொரு நாளும் வித்தியாசமான முறையில் தங்களது எதிர்ப்பை தெரிவித்து அப்பகுதியினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
வடகாடு மற்றும் நல்லாண்டார்கொல்லை பகுதியையொட்டிய பக்கத்து கிராமங்களை சேர்ந்தவர்களும் ஆதரவு தெரிவித்து இப்போராட்டத்தில் பங்கேற்று வருகின்றனர்.
இந்த நிலையில் வடகாட்டில் பஸ் நிறுத்தம் அருகே நேற்று 9-வது நாளாக தர்ணா போராட்டம் நீடித்தது. வடகாடு மற்றும் பக்கத்து கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் பலர் பலா, மா, வாழை, நிலக்கடலை, மிளகுச்செடி உள்பட தாங்கள் விளைவித்த விளைபொருட்களுடன் கையில் கருப்பு கொடியை ஏந்தியபடி வடகாடு ஊரின் எல்லைப்பகுதியில் இருந்து ஊர்வலமாக போராட்ட களத்திற்கு வந்தனர். ஊர்வலத்தின் போது அத்திட்டத்திற்கு எதிராகவும், மத்திய அரசுக்கு எதிராகவும் கோஷங்களை எழுப்பியபடி வந்தனர்.
இதேபோல நல்லாண்டார் கொல்லையிலும் இயற்கை எரிவாயு எடுக்க எதிர்ப்பு தெரிவித்து நேற்று 26-வது நாளாக போராட்டம் நடந்தது. போராட்ட களத்திற்கு ஆடு, மாடுகளை அழைத்து வந்து பந்தல் கம்பத்தில் கட்டி வைத்து பொதுமக்கள் போராட்டத்தில் பங்கேற்றனர். நல்லாண்டார் கொல்லையில் ஓ.என்.ஜி.சி. நிறுவனத்தினர் அமைத்துள்ள ஆழ்துளை கிணற்றில் உள்ள இரும்பு குழாய் அருகே இளைஞர்கள் பலர் உடலில் சேறும், சகதியையும் பூசிக்கொண்டு தங்களது எதிர்ப்பை தெரிவிக்கும் வகையில் நேற்று நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது அவர்கள் கூறு கையில், இந்த சேறும், சகதியும் தான் எங்கள் உயிர். விவசாயிகளின் வாழ்வாதாரத்தை கெடுக்கும் ஹைட்ரோ கார்பன் திட்டம் எங்களுக்கு எப்போதும் வேண்டாம் என்றனர்.
இதில் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டு இத்திட்டத்திற்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். திட்டத்தை கைவிடுவதாக மத்திய அரசு அறிவிக்கும் வரை போராட்டம் தொடரும் என போராட்டக்குழுவினர் தெரிவித்தனர்.
போராட்டக்களத்தில் சிறுவர்கள் பலர், திட்டத்துக்கு எதிரான வாசகங்கள் எழுதிய பதாகைகளை கையில் ஏந்தியிருந்தனர். வடகாட்டில் போராட்ட களத்திற்கு தினமும் பொதுமக்கள் ஏராளமானோர் வருகை தருவதால் போராட்டம் தீவிரமடைந்துள்ளது.
வடகாடு கிராமத்தில் 10-வது நாளாகவும், நல்லாண்டார்கொல்லையில் 27-வது நாளாகவும் இன்றும் போராட்டம் தொடர்கிறது.
இயற்கை எரிவாயு திட்டத்தை ரத்து செய்ய வேண்டும், தங்கள் பகுதிகளில் ஓ.என்.ஜி.சி. நிறுவனத்தால் அமைக்கப்பட்ட ஆழ்குழாய் கிணறுகளை மூடவேண்டும், இதற்காக தமிழக அரசு சட்டமன்றத்தில் அவசர சட்டம் பிறப்பிக்க வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்கள்.