செய்திகள்

குத்தாலம் அருகே குழந்தையை கொன்று தாய் தற்கொலை ஏன்? பரபரப்பு தகவல்

Published On 2017-02-28 12:09 IST   |   Update On 2017-02-28 12:09:00 IST
குத்தாலம் அருகே குழந்தையை கொன்று தாய் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

குத்தாலம்:

நாகை மாவட்டம் குத்தாலத்தை அடுத்த மருதூர் சத்திரத்தை சேர்ந்த காளீஸ்வரன் மனைவி கலாமதி (வயது 27) இவர்களுக்கு திருமணமாகி 2½ ஆண்டுகள் ஆகிறது. இவர்களுக்கு 1½ வயதில் மதுப்பிரியா, கவிப்பிரியா என்ற இரட்டை குழந்தைகள் உள்ளனர். மெக்கானிக்காக வேலை பார்த்து வந்த காளீஸ்வரன் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு நடந்த விபத்தில் இறந்துவிட்டார்.

கணவர் இறந்த துக்கத்திலும், 2 குழந்தைகளை எப்படி காப்பாற்றுவது என்ற மனநிலையிலும் கலாமதி இருந்து வந்தார். இந்த நிலையில் நேற்று தனது 2 குழந்தைகளின் கழுத்தை அறுத்தார். பின்னர் அவர்தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

கழுத்து அறுபட்ட குழந்தை மதுபிரியா சம்பவ இடத்திலேயே இறந்தது. மற்றொரு குழந்தை கவிப்பிரியா முனங்கி கொண்டு இருந்தாள். கலாமதியின் மாமியார் பரிபூரணம் தினமும் கலாமதி வீட்டுக்கு வந்து குழந்தைகளை குளிப்பாட்டி செல்வது வழக்கம் . அதுபோல நேற்று மாலையும் வீட்டுக்கு வந்தார் . அப்போது கதவு உள்பக்கம் தாழிடப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

வெண்டிலேட்டர் வழியாக பார்த்த போது கலாமதி தூக்கில் பிணமாக தொங்கியதும் குழந்தை மதுப்பிரியா கழுத்து அறுத்து கொலை செய்யப்பட்டு கிடப்பதையும் கண்டு திடுக்கிட்டார். அக்கம்பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்றார். பின்னர் இது குறித்து குத்தாலம் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து உயிருக்கு போராடி கொண்டு இருந்த கவிப்பிரியாவை மீட்டு மயிலாடுதுறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு முதல் உதவி சிகிச்சை அளிக்கபட்ட பின்னர் மேல் சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கவிப்பிரியாவை அனுப்பி வைத்தனர். அங்க சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

கணவர் இறந்ததால் கலாமதி வறுமையில் வாடினார். இதனால் 100 நாள் வேலைக்கு சென்று வந்துள்ளார். பட்டதாரியான அவர் அரசு வேலைக்கு முயற்சி செய்து வந்தார்.

குத்தாலம் ஒன்றிய அலுவலகத்தில் அங்கன்வாடி சத்துணவு அமைப்பாளர் பணிக்கு ஆதரவற்ற விதவைகள் விண்ணப்பிக்கலாம் என்பதை அறிந்த அவர் கடந்த 10 நாட்களுக்கு முன்பு அதே பகுதியில் ஒரு வாடகை வீடு பிடித்து அங்கு குழந்தைகளுடன் தனியாக வசித்து வந்தார். அங்கன்வாடி சத்துணவு அமைப்பாளர் பணிக்கு விண்ணப்பித்த கலாமதியிடம் வேலை கிடைப்பது கடினம் என்று சிலர் கூறியதால் அந்த வேலையும் தனக்கு கிடைக்காது என்று கலக்கம் அடைந்துள்ளார்.

பிறருக்கு பாரமாக வாழ்வதை விட சாவதே மேல் என்று கருதி தனது மனதை கல்லாக்கி கொண்டு இரண்டு குழந்தைகளின் கழுத்தையும் அறுத்து விட்டு அவரும் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்துள்ளது.

வருமானம் இல்லாத விரக்தியில் குழந்தைகளை கொலை செய்து தாய் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் மருதூர்சத்திரம் கிராம மக்களை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.

Similar News