செய்திகள்

சாத்தான்குளம் கோர்ட்டில் ஆஜராகாத சப்-இன்ஸ்பெக்டர் உள்பட 3 பேருக்கு பிடிவாரண்டு

Published On 2017-02-02 11:05 IST   |   Update On 2017-02-02 11:05:00 IST
சாத்தான்குளம் கோர்ட்டில் ஆஜராகாத சப்-இன்ஸ்பெக்டர் உள்பட 3 பேருக்கு பிடிவாரண்டு பிறப்பிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சாத்தான்குளம்:

சாத்தான்குளம் அருகே உள்ள பெருமாள்குளத்தை சேர்ந்தவர் சேர்மபாண்டி. இவரது மனைவி பெருமாள் அம்மாள்(வயது 66) இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த சக்திவேல் மனைவி பார்வதிக்கும் நிலப்பிரச்சனை காரணமாக முன்விரோதம் இருந்து வந்துள்ளது.

பிரச்சனைக்குரிய இடத்தில் பார்வதி சுவர் கட்ட முயன்றதாக தெரிகிறது. இதற்கு பெருமாள் அம்மாள் எதிர்ப்பு தெரிவித்தார்.

இந்நிலையில் கடந்த 26.8.2014 அன்று பார்வதி, அவரது மகள் இந்திரா ஆகியோர் பெருமாள் அம்மாளை தாக்கினர். இதுகுறித்து பெருமாள் அம்மாள் சாத்தான்குளம் போலீசார் மற்றும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டிடம் புகார் செய்தார். ஆனால் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லையாம்.

இதையடுத்து பெருமாள்அம்மாள் தான் கொடுத்த புகார் மீது நடவடிக்கை எடுக்காத சப்-இன்ஸ்பெக்டர் பால்துரை மற்றும் பார்வதி, அவரது உறவினர் இந்திரா ஆகிய 3பேர் மீது சாத்தான்குளம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு விசாரணை சாத்தான்குளம் குற்றவியல் நீதிமன்றத்தில் நடந்து வந்தது.

இந்நிலையில் இந்த வழக்கு விசாரணை நேற்று நடைபெற்றது. சப்-இன்ஸ்பெக்டர் பால்துரை உள்பட 3 பேரும் இந்த வழக்கு விசாரணைக்கு தொடர்ந்து ஆஜராகவில்லை. இதையடுத்து நீதிபதி(பொறுப்பு) முருகன் வழக்கில் ஆஜராகாத சப்-இன்ஸ்பெக்டர் பால்துரை உள்பட 3பேருக்கும் பிடிவாரண்டு பிறப்பித்து உத்தரவிட்டார். சப்-இன்ஸ்பெக்டர் பால்துரை தற்போது பாளை தாலுகா போலீஸ் நிலையத்தில் பணியாற்றி வருவது குறிப்பிடத்தக்கது.

Similar News