செய்திகள்

ரூ.1.20 கோடி மதிப்பிலான பழைய நோட்டுகள் பறிமுதல்

Published On 2017-01-27 06:08 GMT   |   Update On 2017-01-27 06:08 GMT
காரைக்குடியில் மாற்றுவதற்காக கொண்டு வந்த ரூ. 1.20 கோடி மதிப்பிலான பழைய 500, ஆயிரம் ரூபாய் நோட்டுகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.
காரைக்குடி:

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி 100 அடி ரோட்டில் ஒரு தனியார் லாட்ஜ் உள்ளது. இங்கு தங்கியுள்ள மர்ம ஆசாமிகளிடம் பழைய ரூபாய் நோட்டுகள் இருப்பதாக காரைக்குடி வடக்கு போலீசுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து போலீசார் இன்று அதிகாலை 4 மணியளவில் அந்த லாட்ஜில் அதிரடி சோதனை நடத்தினர். அங்கு சென்னை அசோக்நகரை சேர்ந்த சுப்பிரமணியன் (வயது 40), அனகாபுத்தூர் அருண் (40), வண்ணாரப் பேட்டை காஜா (39) உள்பட 4 பேர் தங்கியிருந்த அறையை சோதனை செய்த போது ரூ. 1.20 கோடி மதிப்பிலான பழைய ஆயிரம், 500 ரூபாய் நோட்டுகள் இருப்பது தெரியவந்தது.

அதனை போலீசார் கைப்பற்றி, 4 பேரையும் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.

காரைக்குடியை சேர்ந்த ராமையா என்பவருக்கு சொந்தமான பணம் என்றும், அதனை கொடுக்க வந்ததாகவும் 4 பேரும் தெரிவித்தனர்.

இதையடுத்து போலீசார் ராமையாவை வரவழைத்து விசாரணை நடத்தினர். காரைக்குடியை சேர்ந்த தி.மு.க.பிரமுகர் ஒருவர் பழைய பணத்தை மாற்றி புதிய நோட்டுகளை கமி‌ஷன் அடிப்படையில் மாற்றி தருவதாக கூறினார்.

அதை நம்பி தான் சென்னையில் ஒரு தெரிந்த ஒருவர் மூலம் பணத்தை கொண்டு வருமாறு கூறியதாக அவர் தெவித்தார். அதன்படி தி.மு.க. பிரமுகரிடம் போலீசார் விசாரணை நடத்த முடிவு செய்து உள்ளனர். பழைய ரூபாய் நோட்டுகளை மாற்ற காலக்கெடு முடிந்த நிலையில், ரூ.1.20 கோடி மதிப்பில் பழைய நோட்டுகள் சிக்கியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

காரைக்குடியில் உள்ள ஒரு சில வங்கிகள் சட்ட விரோதமாக பணத்தை மாற்றி தருவதாக புகார் எழுந்துள்ளது. இதுகுறித்து வங்கி அதிகாரிகள் உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

Similar News