செய்திகள்

தோட்டத்துக்கு சென்ற விவசாயியை சிறுத்தைப்புலி கடித்து கொன்றது

Published On 2017-01-27 08:40 IST   |   Update On 2017-01-27 08:40:00 IST
செங்கோட்டை அருகே தோட்டத்துக்கு சென்ற விவசாயியை சிறுத்தைப்புலி கடித்துக் கொன்றது.
செங்கோட்டை:

நெல்லை மாவட்டம் செங்கோட்டை பகுதியில் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் குடியிருப்பு பகுதிகளுக்குள் வரும் சிறுத்தைப்புலி ஆடு, மாடுகள், நாய்களை வேட்டையாடுவது தொடர்கதையாகி வருகிறது. செங்கோட்டை அருகே உள்ள பண்பொழி கிராமத்தை சேர்ந்தவர் சுப்பையா என்கிற செல்லத்துரை(வயது 70).

விவசாயியான அவர் தேன்பொத்தை, கடுவா பாறை பகுதியில் உள்ள தனது தோட்டத்தில் மரவள்ளிக்கிழங்கு பயிரிட்டுள்ளார். தினமும் அவர் தோட்டத்துக்கு காவலுக்கு செல்வது வழக்கம். நேற்று முன்தினம் காலை 8 மணி அளவில் அவர் வழக்கம்போல் தனது தோட்டத்துக்கு சென்றார்.

அப்போது அங்கு திடீரென வந்த ஒரு சிறுத்தைப்புலி செல்லத்துரையின் தோட்டத்துக்குள் புகுந்தது. சிறுத்தைப்புலியை பார்த்த செல்லத்துரை பதறியடித்துக் கொண்டு ஓடினார். ஆனாலும் சிறுத்தைப்புலி அவரை விடாமல் துரத்திச் சென்று செல்லத்துரையின் கழுத்தில் கடித்துக் குதறியது. இதில் செல்லத்துரை அந்த இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் இறந்தார்.

செல்லத்துரை வீட்டுக்கு வராததால் நேற்று காலை அவருடைய குடும்பத்தினர் தோட்டத்துக்கு சென்று தேடியபோது அவர் ரத்தக்காயங்களுடன் பிணமாக கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். தகவல் அறிந்த செங்கோட்டை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து விசாரணை நடத்தினர். செல்லத்துரை கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என அவருடைய குடும்பத்தினர் தெரிவித்தனர். ஆனால் செல்லத்துரை உடலை ஆய்வு செய்ததில் வனவிலங்கு தாக்கிய அடையாளங்கள் இருந்தன.

அந்த பகுதியில் பதிவாகி இருந்த கால்தடங்களும் சிறுத்தைப்புலியின் கால்தடங்கள் தான் என வனத்துறையினர் உறுதி செய்தனர். எனவே சிறுத்தைப்புலி கடித்ததில் செல்லத்துரை இறந்து இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர். அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக செங்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர்.

அந்த சிறுத்தைப்புலியை கூண்டு வைத்து பிடிக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Similar News