செய்திகள்
அன்னூர் பகுதியில் மத்திய குழுவினர் வறட்சியால் பாதித்த பயிர்களை பார்வையிட்ட போது எடுத்த படம்.

விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் பெற்று தர நடவடிக்கை எடுக்கப்படும்: மத்திய குழுவினர் உறுதி

Published On 2017-01-26 04:49 GMT   |   Update On 2017-01-26 04:49 GMT
கோவை மாவட்டத்தில் வறட்சியால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மத்திய குழுவினர் ஆய்வு நடத்தினர். அப்போது விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் பெற்று தர நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய குழுவினர் உறுதி அளித்தனர்.
கோவை:

தமிழகத்தில் இந்த ஆண்டு பருவமழை பொய்த்து விட்டது. இதனால் விவசாய பயிர்கள் தண்ணீரின்றி கருகி விட்டன.

இதைதொடர்ந்து விவசாயிகள் வேதனை அடைந்தனர். மாரடைப்பால் மரணம், தற்கொலை நிகழ்வுகள் நடைபெற்றது. தமிழகத்தை வறட்சி பாதித்த மாநிலமாக அறிவிக்கப்பட்டது.

தமிழகத்தில் வறட்சி குறித்து மத்திய அரசு ஆய்வு செய்ய வேண்டும் என முதல்-அமைச்சர் ஓ. பன்னீர் செல்வம் கோரிக்கை விடுத்து இருந்தார்.

இதனை தொடர்ந்து தமிழகத்தில் ஆய்வு நடத்த மத்திய குழு வந்தது. அவர்கள் 4 குழுக்களாக பிரிந்து ஆய்வு நடத்தி வருகின்றனர்.

இவர்களில் ஒரு குழுவினர் கோவை மாவட்டத்துக்கு வந்தனர்.

மத்திய குழுவில் ஐ.ஏ.எஸ். அதிகாரிகளான மத்திய விரிவாக்கம் மற்றும் வறட்சி மேலாண்மை இயக்குனர் விஜய ராஜ் மோகன், குடிநீர் மற்றும் சுகாதார அமைச்சகத்தின் உதவி ஆலோசகர் சந்தோஷ் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

இவர்களுடன் தமிழக குடிநீர் வடிகால் வாரிய நிர்வாக இயக்குனர் தீரஜ்குமார் மற்றும் மாவட்ட கலெக்டர் ஹரிஹரன், மாவட்ட வருவாய் அலுவலர்வெங்கடேசன், வேளாண் துணை இயக்குனர் இக்பால் மற்றும் வருவாய் துறையினரும் சென்று வறட்சி பாதித்த இடங்களை பார்வையிட்டனர்.

இந்த குழுவினர் கோவை மாவட்டத்தில் அன்னூர் அருகே உள்ள குப்பே பாளையம், கொண்டையம்பாளையம், பொகலூர் உள்ளிட்ட பகுதிகளில் வறட்சியால் பாதித்த பகுதிகளை பார்வையிட்டனர். அங்கு விவசாயிகளிடம் மத்திய குழுவினர் கருத்துகளை கேட்டறிந்தனர்.

அவர்களிடம் விவசாயிகள் கருகிய பயிர்களை காண்பித்து கண்ணீர் மல்க குறைகளை தெரிவித்தனர்.

மத்திய குழுவினரிடம் அன்னூர் விவசாயிகள் கூறியதாவது:-

அன்னூர் ஒன்றிய பகுதிகளில் சோளம், கம்பு, எள்ளு, தட்டை பயிர், பாசிப் பயறு, சாமை போன்ற பயிர்கள் மழை இன்றி பாதிக்கப்பட்டு உள்ளது. நிலத்தடி நீர் மட்டம் வெகுவாக குறைந்து விட்டது. அவிநாசி-அத்திக்கடவு திட்டத்தை நிறைவேற்ற வேண்டும். விவசாய கடனை ரத்து செய்ய வேண்டும். பயிர் கருகி விட்டது. ஆடு, மாடுகளுக்கு தண்ணீர், இல்லாமல் தவித்து வருகிறோம்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

இதைதொடர்ந்து மத்திய குழுவை சேர்ந்த மத்திய விரிவாக்கம் மற்றும் மேலாண் இயக்குனர் விஜய ராஜ் மோகன் கூறியதாவது:-

முதல்முறையாக ‘புவன்’ என்ற செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த செயலி மூலம் குறிப்பிட்ட பகுதியில் எந்த அளவுக்கு வறட்சி என்பதை தெரிந்து கொள்ளலாம்.

தமிழகத்துக்கு ரூ.39 ஆயிரத்து 560 கோடிக்கு நிவாரணம் கேட்கப்பட்டுள்ளது. நாள்கள் 4 குழுக்களாக பிரிந்து தலா 8 மாவட்டங்களில் ஆய்வு செய்து வருகிறோம். நாங்கள் பார்த்த அளவில் வறட்சி அதிகமாக உள்ளது.

கோவை மாவட்டத்தில் மஞ்சள், வாழை, கரும்பு பயிர்கள் வறட்சியால் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளன. கரும்பு பயிர்களே வறட்சியை தாங்கி ஓராண்டுக்கு வளரக் கூடியது. ஆனால் அவை கூட காய்ந்து கருகி போனதை பார்த்தோம்.

வறட்சி குறித்து அறிக்கை தயார் செய்து அரசுக்கு ஒரு வார காலத்தில் அனுப்பி வைப்போம். விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் பெற்று தர நடவடிக்கை எடுக்கப்படும்.

கோவை மாவட்டத்தில் 276 கிராமங்களில் வறட்சியால் பாதிக் கப்பட்டுள்ளது என்றும் நிவாரணமாக ரூ.680 கோடி தேவை என்றும் மாவட்ட நிர்வாகம் சார்பில் எங்களிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

Similar News