செய்திகள்

ஜல்லிக்கட்டுக்கான அவசர சட்டத்தை நிரந்தர சட்டமாக்கவேண்டும்: வாசன்

Published On 2017-01-23 09:13 GMT   |   Update On 2017-01-23 09:13 GMT
ஜல்லிக்கட்டுக்கான அவசர சட்டத்தை நிரந்தர சட்டமாக்கவேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே. வாசன் பேசியுள்ளார்.
காஞ்சீபுரம்:

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்து காஞ்சீபுரம் தெற்கு மாவட்ட தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் சார்பில் உத்திரமேருர் பஸ் நிலையம் அருகே பொதுக்கூட்டம் மாவட்ட தலைவர் மலையூர் புருஷோத்தமன் தலைமையில் நடைபெற்றது. வட்டாரத் தலைவர் ஜெயக்குமார் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் தலைவர் ஜி.கே.வாசன் கலந்து கொண்டு பேசியதாவது:-

நடைபெறுகின்ற இந்தக் கூட்டம் விசே‌ஷமான கூட்டம். ஒரு குறிக்கோளுக்காக நடைபெறும் கூட்டம் தமிழகம் முழுவதும் இளைஞர்கள், மாணவர்கள், பொது மக்கள் ஒன்று கூடி நம் கலாச்சாரத்தினைக் காப்பாற்ற அறவழியில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

ஜனவரி முதல் வாரத்திலேயே தமிழ் மாநில காங்கிரஸ் சார்பினில் முதன் முதலாக ஜல்லிக்கட்டினை நடத்த வலியுறுத்தி அலங்காநல்லூரில் போராட்டம் நடத்தி இந்தப் போராட்டத்திற்கு அடித்தளமிட்டது.

தற்போது ஜல்லிக்கட்டு பிரச்சனைக்காக இளைஞர்கள் மாணவ மாணவியர்கள் பொதுமக்கள் என அனைத்து தரப்பு மக்களும் அமைதியான முறையில் போராடி வருகின்றனர்.

மத்திய, மாநில அரசுகள் கால தாமதமாக அவசர சட்டத்தினை கொண்டு வந்தாலும் இது வரவேற்கத்தக்கது. இதனை நிரந்தர சட்டமாக மாற்றி போராட்டக்காரர்களுக்கு நம்பிக்கை அளிக்க வேண்டும். சட்டமன்றம் கூடியதும் இந்த அவசர சட்டத்திற்கு முழு வடிவம் தர வேண்டியது தமிழக அரசின் பொறுப்பு.

கூட்டத்தில் த.மா.கா. மூத்த தலைவர் ஞானதேசிகன், இளைஞரணி மாநில பொதுச்செயலாளர் சங்கர், தென் சென்னை கிழக்கு மாவட்ட தலைவர் கொட்டிவாக்கம் முருகன், மாவட்ட இளைஞரணி தலைவர் கார்த்திக், காஞ்சி நகர தலைவர் எஸ்.சுகுமார், நிர்வாகிகள் கஜேந்திரன், ஆதிகேசவலு, கார்த்திகேயன், சுதர்சன், வெங்கடேசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Similar News