செய்திகள்

ஜல்லிக்கட்டு நடத்த நிரந்தர சட்டம் வரும்வரை ஓய மாட்டோம்: மாணவர்கள் ஆவேசம்

Published On 2017-01-22 09:58 GMT   |   Update On 2017-01-22 09:58 GMT
கடலூரில் வீரவிளையாட்டான ஜல்லிக்கட்டு நடத்த நிரந்தர சட்டம் வரும்வரை ஓய மாட்டோம் என்று மாணவர்கள் ஆவேசமாக கூறினார்.
கடலூர்:

ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு நிரந்தர தீர்வு காணக்கோரி தமிழக முழுவதும் மாணவர்கள், இளைஞர்களின் போராட்டம் நாளுக்குநாள் வலுத்து வருகிறது.

பெண்கள், குழந்தைகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து கலந்து கொள்கின்றனர்.

கடலூரில் ஜல்லிக்கட்டுக்கு நிரந்தர தீர்வுகாண கோரி மாணவர்கள், இளைஞர்களின் போராட்டம் 5-வது நாளாக இன்றும் தொடர்ந்து நடந்து வருகிறது. நேற்று முன்தினம் பெய்த கனமழையால் மஞ்சக்குப்பம் மைதானத்தில் நடைபெற்ற போராட்டம் தலைமை தபால் நிலையம் அருகே உள்ள பஸ் நிறுத்தும் இடத்திற்கு நேற்று மாற்றப்பட்டது. அங்கு தொடர்ந்து மாணவர்கள், இளைஞர்கள், பெண்கள், குழந்தைகள் என 500-க்கும் மேற்பட்டோர் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் நேற்று மாலை ஜல்லிக்கட்டு நடத்த அவசர சட்டம் பிறப்பிக்கப்பட்டது. அவசர சட்டமே நிரந்தர தீர்வாகும் என முதல்-அமைச்சர் பன்னீர்செல்வம் அறிவித்தார். ஆனால் அதை போராட்டக்குழுவினர் ஏற்க மறுத்தனர்.

இதுகுறித்து போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் கூறும்போது, வீரவிளையாட்டான ஜல்லிக்கட்டுக்கு பிறப்பிக்கப்பட்ட அவசர சட்டம் எங்களுக்கு தேவைஇல்லை. ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு எந்த தடையும் இன்றி நிரந்தரமாக தீர்வு காண வேண்டும். அதுதான் எங்களுக்கு தேவை. அதுவரை நாங்கள் போராட்டத்தை கைவிடப் போவதில்லை என்று ஆவேசமாக தெரிவித்தனர்.

அப்போது நிரந்தர சட்டம் கொண்டு வரும் வரை போராடுவோம், பீட்டாவை நிரந்தரமாக தடை செய்ய வேண்டும் என்று அனைவரும் கோ‌ஷம் எழுப்பினர். இன்று நடைபெறும் போராட்டத்திற்கு பொதுமக்கள் சாரை சாரையாக வந்த வண்ணம் உள்ளனர்.

பெண்கள் தங்களது கைக்குழந்தைகளுடன் வந்து போராட்டத்தில் கலந்து கொண்டனர். சிறுவர்- சிறுமிகள் ஜல்லிக்கட்டுக்கு நிரந்தர தீர்வு வரும்வரை ஓயமாட்டோம் என உற்சாக குரல் எழுப்பி வருகின்றனர்.

மழை, குளிரையும் பொருட்படுத்தாமல் சிறிதுகூட சோர்வு அடையாமல் போராடி வருகிறார்கள். போராட்ட பந்தலில் தமிழக பாரம்பரிய விளையாட்டான சிலம்பம், கும்மியடி நடைபெறுகிறது. டிரம்ஸ் வாசித்தும், ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக பாட்டு பாடியும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு அரசு ஆஸ்பத்திரி மருத்துவர்கள், கிராம செவிலியர் சங்கத்தினர், மாற்று திறனாளிகள் அமைப்பினர் உள்பட பல்வேறு அமைப்பினரும் ஊர்வலமாக வந்து ஆதரவு தெரிவித்து வருகின்றனர். அவர்களுக்கு தேவையான உணவு மற்றும் தண்ணீர் களை சமூக ஆர்வலர்கள் வழங்கி வருகின்றனர்.

போராட்டம் நடைபெறும் இடத்தில் 108 ஆம்புலன்ஸ் நிறுத்தப்பட்டது. இதேபோல் கடலூர் மாவட்டத்தில் உள்ள பண்ருட்டி, நெய்வேலி, பெண்ணாடம், வடலூர், குறிஞ்சிப்பாடி உள்ளிட்ட பல இடங்களில் ஜல்லிக்கட்டுக்கு நிரந்தர தீர்வுகாண கோரி மாணவர்கள், இளைஞர்களின் போராட்டம் இன்று 5-வது நாளாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

மாவட்டத்தில் போராட்டம் நடைபெறும் இடத்தில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

Similar News