செய்திகள்

தமிழகத்தில் நாளை ஆட்டோ, வேன், கால் டாக்சி ஓடாது: ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக தொழிற்சங்கங்கள் ஸ்டிரைக்

Published On 2017-01-19 09:06 GMT   |   Update On 2017-01-19 09:06 GMT
ஜல்லிக்கட்டு போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக தமிழகம் முழுவதும் நாளை 1௦-க்கும் மேற்பட்ட தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்தம் அறிவித்துள்ளன. இதனால் வேன், ஆட்டோ, கால் டாக்சிகள் போன்ற அனைத்தும் நாளை ஓடாது.
சென்னை:

தமிழகத்தில் ஜல்லிக்கட்டு தொடர்பாக அவசர சட்டம் கொண்டுவர வேண்டும், பீட்டா அமைப்பைத் தடை செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, இளைஞர்கள் தமிழகம் முழுவதும் தொடர்ந்து 3-வது நாளாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இளைஞர்களின் போராட்டத்தைத் தொடர்ந்து டெல்லிக்கு சென்ற தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பிரதமர் மோடியை சந்தித்து ஜல்லிக்கட்டு தொடர்பாக அவசர சட்டம் கொண்டுவர வேண்டும் என வலியுறுத்தினார்.

இதற்கு பிரதமர் மோடி ஜல்லிக்கட்டு தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் இருப்பதால் என்னால் எதுவும் செய்ய முடியாது. எனினும், ஜல்லிக்கட்டு விவாகரத்தில் தமிழக அரசு எடுக்கும் நடவடிக்கைக்கு நாங்கள் உறுதுணையாக இருப்போம் என்று கூறினார்.

மோடியை சந்தித்தபின் செய்தியாளர்களிடம் பேசிய ஓ.பன்னீர்செல்வம் ஜல்லிக்கட்டு விவகாரத்தில் தமிழக அரசின் செயலை விரைவில் காண்பீர்கள் என தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், ஜல்லிக்கட்டு போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக தமிழகம் முழுவதும் நாளை 1௦-க்கும் மேற்பட்ட தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்தம் அறிவித்துள்ளன. மேலும், தமிழகத்தில் ஆட்டோ, வேன், கால் டாக்சி போன்ற 1௦ லட்சம் வாகனங்கள் இயங்காது என தமிழக சாலை போக்குவரத்து தொழிலாளர் சம்மேளனம் அறிவித்துள்ளது. லாரிகளும் நாளை இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே, நாளை பயணிகள் போக்குவரத்து மற்றும் சரக்கு போக்குவரத்து சேவை கடுமையாகப் பாதிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது.

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக நாளை நீதிமன்றத்தை புறக்கணிப்பதாக சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

Similar News